கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்புதுறை அலுவலர்கள் ஆய்வு; கெட்டுப்போன 103.5 கிலோ மீன்கள் அழிப்பு

கோவை: உக்கடம் லாரி பேட்டை மீன் மார்க்கெட் மற்றும் செல்வபுரம் பைபாஸ் சாலையில் உள்ள உக்கடம் சில்லறை மீன் மார்க்கெட் ஆகிய இடங்களில் உள்ள 51 கடைகளில் உணவு பாதுகாப்புதுறை அலுவலர்கள் திடீர் களஆய்வு மேற்கொண்டு, கெட்டுப்போன நிலையில் இருந்த சுமார் 103.5 கிலோ மீன்களை பறிமுதல் செய்து அழித்தனர்.

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் உத்தரவின் பேரில் உணவுப் பாதுகாப்பு துறை நியமன அலுவலரின் அறிவுறுத்தலின் படி, உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் மீன் வளர்ச்சி துறை அதிகாரிகள் என 12 பேர் அடங்கிய 6 குழுக்கள், உக்கடம் லாரி பேட்டை பகுதிகளில் உள்ள 35 மொத்த மீன் மார்க்கெட் விற்பனை கடைகளிலும் மற்றும் செல்வபுரம் பைபாஸ் சாலையில் உள்ள உக்கடம் சில்லறை மீன் மார்க்கெட் பகுதியில் உள்ள 16 கடைகளிலும் மொத்தம் 51 கடைகளில் இன்று அதிகாலை 05.30 மணி முதல் 09.30 மணி வரை திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அக்கள ஆய்வின் போது விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மீன்களில் கெட்டுப்போன மீன்கள் மற்றும் பழைய மீன்கள் ஏதேனும் உள்ளதா என கள ஆய்வு செய்யப்பட்டது.

இந்த திடீர் கள ஆய்வின் போது மொத்த மீன் விற்பனை கடைகளில் 5 கடைகளில் கெட்டுப்போன நிலையில் இருந்த சுமார் 65 கிலோ அளவிலான மீன்கள் மற்றும் 4 சில்லறை மீன் விற்பனை கடைகளில் சுமார் 38.05 கிலோ கெட்டுப்போன மீன்கள் மொத்தம் 103.5 கிலோ மீன்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. இதன் மொத்த சந்தை மதிப்பு சுமார் ரூபாய்.50,150/- ஆகும். கெட்டுப்போன மீன்களை விற்பனைக்கு வைத்திருந்த சில்லறை மற்றும் மொத்த வியாபார செய்யும் 9 கடைகளுக்கு உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் 2006, பிரிவு 55-ன் கீழ் நோட்டீஸ் வழங்கப்படவுள்ளது.

எனவே இது போன்று கெட்டுப்போன மற்றும் பழைய மீன்களை விற்பனை செய்பவர்கள் மீது உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மேலும் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் இது போன்ற திடீர் கள ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும் எனவும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுபோன்ற குறைபாடுகளை கண்டறிய நேரிட்டால் 9444042322 என்ற உணவுப் பாதுகாப்பு துறையின் வாட்ஸ்அப் எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். மேலும் Google Play store- இருந்து உணவு பாதுகாப்பு துறையின் tnfoodsafetyconsumer App என்ற செயலினை பதிவிறக்கம் செய்து புகார் செய்யலாம் என தெரிவிக்கப்படுகிறது. தகவல் தெரிவிப்பவர்கள் விபரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும்.

The post கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்புதுறை அலுவலர்கள் ஆய்வு; கெட்டுப்போன 103.5 கிலோ மீன்கள் அழிப்பு appeared first on Dinakaran.

Related Stories: