சென்னை: சைதாப்பேட்டையில் உள்ள மொத்த இறைச்சி விற்பனை கடைகளில் சுமார் 700 கிலோ கெட்டுப்போன ஆட்டு கால்களை உணவு பாதுகாப்பு துறையினர் பறிமுதல் செய்தனர். இது, ஆட்டுக்கால் சூப் பிரியர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அல்லாதியா மற்றும் ராஜ்மத் மட்டன் சிக்கன் ஸ்டால்களில் சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் சதீஷ் தலைமையில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது, குளிர்சாதன பெட்டியில் விற்பனைக்காக வைத்திருந்த சுமார் 700 கிலோ கெட்டுப்போன பழைய ஆட்டுக் கால்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 10 நாட்கள் முன்பு எழும்பூரில் 1700 கிலோ ஆட்டுக்கறியை பறிமுதல் செய்திருந்தோம். அதன் தொடர்ச்சியாக அவர்கள் எங்கெல்லாம் விற்பனை செய்திருக்கிறார்கள் என்ற பட்டியலை தயார் செய்தோம். அடிப்படையில் ஒவ்வொரு இடமாக சோதனை செய்தபோது சைதாப்பேட்டையில் கெட்டுப்போன ஆட்டு கால்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்கு சென்று பறிமுதல் செய்யப்பட்ட ஆட்டுக்கால்கள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. அந்த ஆய்வின் முடிவில் ஆட்டுக்கால்கள் அனைத்தும் கெட்டுப்போனது என தெரியவந்தது.
தற்போது சுமார் 600 முதல் 700 கிலோ கெட்டுப்போன ஆட்டு கால்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆட்டுக்கால்கள் ரயில் மூலமாக கொண்டு வந்தது தெரிய வந்தது. யாரிடம் வாங்கினார்கள், யாரிடம் இவர்கள் விற்பனை செய்கிறார்கள் என்ற எந்தவித ரசீதும் இல்லை. ஆனால் சிறிய உணவகங்கள் முதல் பெரிய உணவகங்கள் வரை இவர்கள் இறைச்சியை விற்பனை செய்து இருக்கிறார்கள். இந்த பொருட்கள் யாருடைய கைக்கும் போகாமல் அவற்றை அழித்து விடுவோம். தோராயமாக மாதக்கணக்கில் இந்த இறைச்சியை குளிர் சாதன பெட்டிகளில் வைத்திருக்கிறார்கள். அந்த சாதன பெட்டிகள் முறையாக பராமரிக்கவில்லை. ஆட்டுக்கால்கள் முழுவதுமாக உலர்ந்து இருக்க வேண்டும். பாதி ஈரப்பதம் இருந்தால் அந்த கால்களில் கிருமிகள் வளர ஆரம்பித்து விடும். சென்னையில் இதுபோன்று ரசீது இல்லாமல் இறைச்சி வாங்குவதை நிறுத்திவிட்டனர். இதுபோன்ற சிறு சிறு கடைகளில் ரசீது இல்லாமல் வாங்கிக் கொண்டிருக்கின்றனர். தற்போது கடை சீல் வைக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பறிமுதல் செய்யப்பட ஆட்டுக்கால்களை மாநகராட்சி அதிகாரிகள் முறையாக அப்புறப்படுத்துவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். சைதாப்பேட்டை பகுதியில் இறைச்சி கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், கிலோ கணக்கில் கெட்டுப்போன ஆட்டுக்கால்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது, சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஓட்டல்கள் மற்றும் சாலையோர கடைகளில் ஆட்டுக்கால் சூப் வாங்கி குடிப்பவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
The post சைதாப்பேட்டை இறைச்சி விற்பனை கடைகளில் 700 கிலோ கெட்டுப்போன ஆட்டு கால்கள் பறிமுதல்: உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி appeared first on Dinakaran.