போலீசிடம் இருந்து தப்ப முயன்றவருக்கு கை, காலில் முறிவு

நெய்வேலி, ஆக. 31: நெய்வேலி வட்டம் 30 முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன் மகன் கோபி(20). இவருக்கும். அதே பகுதியை சேர்ந்த துரைசாமி மகன் அன்பு(20) என்பவருக்கும் கடந்த இரண்டு மாதத்திற்கு முன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அன்பு, அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் குணசேகரன் மகன் நடராஜன்(32) என்பவரிடம் நடந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். இந்நிலையில் கோபி வட்டம் 30 பகுதியில் நடந்து சென்ற போது, இரண்டு சக்கர வாகனத்தில் நடராஜன், அன்பு ஆகியோர் கோபியை இருசக்கர வாகனத்தில் அழைத்து கொண்டு வட்டம் 30 பகுதியில் உள்ள சுடுகாடு அருகில் கட்டிப்போட்டு சரமாரியாக தாக்கி உள்ளனர்.

இதை தொடர்ந்து கடலூர் மாவட்ட எஸ்பி ராஜாராம் உத்தரவின்பேரில் நெய்வேலி டிஎஸ்பி சபியுல்லா அறிவுறுத்தலின்படி நெய்வேலி தெர்மல் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் போலீசார், வட்டம் 7 பகுதியில் உள்ள என்எல்சி குடியிருப்பில் பதுக்கி இருந்த நடராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இதில் தொடர்புடைய சின்ன காப்பான்குளம் கிராமத்தைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் விக்கி (எ) விக்னேஷ் என்பவரை தேடி வந்த நிலையில், நெய்வேலி என்எல்சி புதிய அனல் நிலையம் பின்புறம் உள்ள சாம்பல் ஏரி கோவில் அருகே பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று விக்கியை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை கண்டதும் மதில் சுவர் ஏறி குதிக்கும் போது கை மற்றும் கால் தவறி கீழே விழுந்ததால் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை மீட்டு மருத்துவமனை கொண்டு சிகிச்சை அளித்தனர். பின்னர் தெர்மல் போலீசார் வழக்கு பதிவு செய்து விக்கியை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

The post போலீசிடம் இருந்து தப்ப முயன்றவருக்கு கை, காலில் முறிவு appeared first on Dinakaran.

Related Stories: