பொதட்டூர்பேட்டையில் பழமையான மின்மாற்றி உடைந்து விழும் அபாயம்: பொதுமக்கள் அச்சம்

திருத்தணி: பொதட்டூர்பேட்டையில் 50 ஆண்டுகளுக்கு முன்பு அமைத்த மின்மாற்றி துருப்பிடித்து உடைந்து விழும் அபாய நிலையில் இருப்பதால், பொதுமகக்ள் அச்சமடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் 10 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள குடியானவர் தெரு கிழக்கு பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு 100 கே.வி மின்திறன் கொண்ட மின்மாற்றி அமைக்கப்பட்டது.

பொதட்டூர்பேட்டையிலிருந்து திருத்தணிக்கு செல்லும் குடியானவர் தெருவில் குடியிருப்புகள், பள்ளி, திருமண மண்டபம், பெட்ரோல் பங்க் ஆகியவை அருகருகில் உள்ளன. இந்தநிலையில், பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த இந்த பகுதியில் உள்ள மின்மாற்றியின் மின்கம்பங்களின் சிமென்ட் உதிர்ந்து, இரும்பு கம்பி துருப்பிடித்து விரிசல்விட்டு பலவீனமாக உள்ளது. எந்த நேரத்திலும் உடைந்து விழும் அபாய நிலையில் இருப்பதால், அப்பகுதியில் குடியிருப்போர் அச்சமடைந்துள்ளனர். மேலும், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சாலையை கடக்கும் போது, குறிப்பாக மழை காலங்களில் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இந்த மின்மாற்றியை வேறு இடத்தில் மாற்றி அமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து காத்திருக்கின்றனர்.

இந்த மின்மாற்றியை வேறு இடத்துக்கு மாற்ற மதிப்பீடு தயார் செய்து உரிய தொகையை மின்வாரியத்திற்கு செலுத்தினால் மட்டுமே மின்மாற்றியை மாற்றி அமைக்க முடியும். உரிய பணம் செலுத்த யாரும் முன் வராததையடுத்து, பேரூராட்சி சார்பில் செலுத்தவும் நடவடிக்கை இல்லாத நிலையில் மின் வாரியத்துக்கு எந்த பணியும் மேற்கொள்ள முடியாத நிலை இருப்பதாக மின்வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

The post பொதட்டூர்பேட்டையில் பழமையான மின்மாற்றி உடைந்து விழும் அபாயம்: பொதுமக்கள் அச்சம் appeared first on Dinakaran.

Related Stories: