கும்பகோணம் அரசினர் கலை அறிவியல் கல்லூரி காலவரையின்றி கல்லூரி மூடல்

கும்பகோணம்: கும்பகோணம் அரசினர் கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்களின் தொடர் போராட்டம் காரணமாக, மறு உத்தரவு வரும் வரை காலவரையின்றி கல்லூரி மூடப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கல்லூரியில் எம்.ஏ தமிழ்த்துறையில் 2ம் ஆண்டு படிக்கும் மாணவரை ஆசிரியர் ஒருவர் ஜாதி ரீதியாக பேசியதாகக் கூறி, கடந்த 6 நாட்களாக வகுப்பை புறக்கணித்து போராடி வருகின்றனர்.

தென்னிந்தியாவின் கேம்பிரிட்ஜ் என போற்றப்படும் கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

கும்பகோணம் அரசு ஆண்கள் கலைக் கல்லூரியில் முதுகலை தமிழ்த் துறை உதவிப் பேராசிரியராக இருக்கும் பெண் பேராசிரியை அண்மையில் முதுகலை தமிழ்த் துறை 2 ஆம் ஆண்டு மாணவர்களுக்குத் தமிழ்ப் பாடம் எடுத்தபோது அவர் சாதி ரீதியாகவும், பெண்களைத் தரக்குறைவாகவும் பேசியதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவர்கள், கல்லூரி முதல்வரிடம் புகார் கடிதம் கொடுத்தனர். ஆனால் கல்லூரி நிர்வாகம், அந்தப் பேராசிரியை மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கல்லூரியின் அசாதாரண சூழல் கருதி கல்லூரி ஆட்சிமன்றக் குழுவின் தீர்மானத்தின்படி மறு உத்தரவு வரும் வரை கல்லூரி காலவரையறையின்றி முடப்படுகிறது என அறிவித்துள்ளனர்.

கல்லூரி பேராசிரியையின் சாதி ரீதியான பேச்சு குறித்து மாணவர்கள் கண்டனம் தெரிவித்து, போராட்டங்களை தொடர்ந்து வருகின்றனர். மேலும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க வேண்டும் எனவும், சம்பந்தப்பட்ட பேராசிரியை மற்றும் நடவடிக்கை எடுக்காத முதல்வர் உள்ளிட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

The post கும்பகோணம் அரசினர் கலை அறிவியல் கல்லூரி காலவரையின்றி கல்லூரி மூடல் appeared first on Dinakaran.

Related Stories: