குழந்தை தொழிலாளர்கள் வேலை செய்கிறார்களா? நீதிபதி தலைமையிலான அதிகாரிகள் செங்கல் சூளைகளில் திடீர் ஆய்வு

* ஒர்க் ஷாப் உரிமையாளருக்கு எச்சரிக்கை

விருத்தாசலம் : விருத்தாசலம் மற்றும் கருவேப்பிலங்குறிச்சி பகுதிகளில் உள்ள செங்கல் சூளைகள் மற்றும் வணிக ஸ்தாபனங்களில் குழந்தை தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கடலூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளர் சீனியர் சிவில் நீதிபதி அன்வர்சாத் தலைமையிலான அதிகாரிகள் நேற்று அப்பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள கார்மாங்குடி, ஏ. வல்லியம் பகுதிகளில் உள்ள செங்கல் சூளைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது செங்கல் சூளைகளில் பணிபுரியும் ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த பாலஅருள்சாமி தம்பதியிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அங்கிருந்த அவரது மகளான ஆறு வயது சிறுமியிடம் பள்ளிக்கூடம் செல்லவில்லையா, ஏன் செல்லவில்லை, செங்கல் சூளையில் வேலை செய்கிறாயா என அதிகாரிகள் கேட்டறிந்தனர்.

அதற்கு அந்த குழந்தை நான் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பள்ளிக்கு செல்லவில்லை என தெரிவித்தார். மேலும் அந்த சிறுமியின் சகோதரியான ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவியின் பள்ளிக்கூடத்திற்கு செல்போனில் தொடர்பு கொண்டு அந்த மாணவியிடம் செல்போனில் பேசினார்கள். அப்போது அந்த மாணவி எனது தங்கை உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தான் பள்ளிக்கூடம் வரவில்லை என தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து குழந்தையை வேலைக்கு பயன்படுத்தக் கூடாது, பள்ளிக்கு அனுப்ப வேண்டும்.

குழந்தை படிப்பிற்காக அரசு பல சலுகைகளை அளித்து வருகிறது. இதனால் குழந்தையின் கல்வியை வீணடித்து விட வேண்டாம் என்று அறிவுரை மற்றும் ஆலோசனை கூறினர். மேலும் எத்தனை வருடமாக பணி செய்கிறீர்கள், பணம் வாங்கிக் கொண்டு கொத்தடிமைகளாக பணி செய்கிறீர்களா, உங்களுடைய அடிப்படைத் தேவைகள் அனைத்தையும், செங்கல் சூளையின் உரிமையாளர் செய்து தருகிறாரா, சொந்த ஊருக்கு நினைத்த நேரத்தில் உங்களால் செல்ல முடிகிறதா, வீட்டு சுப காரியம் நிகழ்ச்சிகளுக்கு செல்வதற்கு உரிமையாளர் அனுமதி தருகிறாரா என கேள்விகளை கேட்டனர். மேலும் உங்களுக்கு ஏதாவது தொந்தரவு இருப்பினும் 1098 நம்பருக்கு கால் செய்ய வேண்டும். குழந்தைகளை வைத்து பணி செய்யக்கூடாது.

அவ்வாறு செய்தால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என எச்சரித்தனர். தொடர்ந்து கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் உள்ள ஒவ்வொரு கடையாக சென்று குழந்தை தொழிலாளர்கள் வேலை செய்கிறார்களா என ஆய்வு செய்தனர். அதில் ஒரு இருசக்கர வாகனம் பழுது நீக்கும் கடையில் வேலை செய்த சிறுவன் ஒருவனை பிடித்து விசாரித்தனர். அப்போது அந்த சிறுவன் பள்ளிக்கூடம் செல்லாதது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், அந்த பணிமனையின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து எச்சரித்தனர்.

விருத்தாசலம் கோட்டாட்சியர் சையத் மெஹ்மூத், தாசில்தார்கள் விருத்தாசலம் உதயகுமார், முஷ்ணம் சேகர், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் ஞானசம்பந்தம், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குனர் மகேஸ்வரன், தொழிலாளர் துணை ஆய்வர் மோதிலால் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இச்சம்பவம் விருத்தாசலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post குழந்தை தொழிலாளர்கள் வேலை செய்கிறார்களா? நீதிபதி தலைமையிலான அதிகாரிகள் செங்கல் சூளைகளில் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: