பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் 14 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.10.91 கோடியில் நலத்திட்ட உதவி

ஊட்டி : தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையின சமூகத்தினர் சமூக,கல்வி மற்றும் பொருளாதார நிலைகளில்,மேம்பாடு அடைவதற்கு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார்.வேலை வாய்ப்பு மற்றும் தொழில் போன்ற நிலைகளில் தங்களது நிலையினை உயர்த்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் அளிக்கும் பொருட்டும்,சமுதாயத்திலுள்ள இதர பிரிவினருக்கு சமமான நிலையினை அனைத்துத் துறைகளிலும் அவர்கள் அடைவதை இலக்காகக் கொண்டும், பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தி வருகிறார்.

மேலும்,பிற்படுத்தப்பட்டோர்,மிகப் பிற்படுத்தப்பட்டோர்,சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் வாழ்வில் ஒரு மறுமலர்ச்சியும்,நம்பிக்கையும் ஏற்படுத்தும் இத்தகைய திட்டங்கள் பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குநரகம்,மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்குநரகம்,மற்றும் சிறுபான்மையினர் நல இயக்குநரகம் ஆகிய மூன்று இயக்குநரகங்களால் செயல்படுத்தப்படுகின்றன.

மேலும், பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபினர் வகுப்பினரின், சமூககல்வி மற்றும் பொருளாதார நிலைகளைக் குறிப்பிடத்தக்க அளவு மேம்படுத்துவதில் தமிழகத்தில் பல ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டுக் கொள்கை, உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து பயில்வதற்கும், அரசு மற்றும் பொதுத் துறைகளில் வேலை வாய்ப்புகள் பெறுவதற்கும் ஏதுவாக சிறந்ததொரு பங்களிப்பை வழங்கியுள்ளது.

சிறுபான்மையினர் இனத்தை சேர்ந்த பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, உலமாக்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில்,மானியத்துடன் கூடிய புதிய இரு சக்கர வாகனம், விலையில்லா மிதிவண்டிகள்,பெண்களுக்கு தேவையான மகப்பேறு உதவித்தொகை,விபத்து ஈட்டுறுதி தொகை, ஈமச்சடங்கு தொகை,சிறுபான்மையினர் இனத்தை சார்ந்த ஏழை,எளிய பெண்கள் தொழில் புரிய மின் மோட்ாருடன் கூடிய விலையில்லா தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத்தில்,உறுப்பினர்களாக உள்ள உறுப்பினர்களுக்கு நலவாரிய அட்டை,டாம்கோ நிறுவனத்தின் மூலமாக சிறுபான்மையினர் மக்களுக்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு கடன் உதவிகள்,தமிழ்நாட்டில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களை புணரமைத்தல் மற்றும் பழுது பார்த்தல், ஜெருசலேம் பயணம் செல்ல அரசால் நிதி உதவி போன்ற நலத்திட்ட உதவிகள் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், நீலகிரி மாவட்டத்தில், 7.5.2021 முதல் தற்போது வரை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில், கிராமப்புறப் பள்ளிகளில், 3ம் வகுப்பு முதல் 6ம் வகுப்பு வரை பயிலும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சார்ந்த 776 மாணவிகளுக்கு ரூ.4.90 லட்சம் கல்வி ஊக்கத் தொகையும், சிறுபான்மையினர் வகுப்பை சார்ந்த கிராமப்புறப் பள்ளிகளில் 3ம் வகுப்பு முதல் 6ஆம் வகுப்பு வரை பயிலும் 798 மாணவிகளுக்கு ரூ.4.93 லட்சம் கல்வி ஊக்கத்தொகையும், 2021 முதல் 2023ம் கல்வியாண்டு வரை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11ம் வகுப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்த 5,644 மாணவர்களுக்கு ரூ.2.78 கோடி செலவில் மிதிவண்டிகளும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இனத்தைச் சார்ந்த ஏழை, எளிய 78 மகளிர்களுக்கு ரூ.4.80 லட்சம் மதிப்பில் தையல் இயந்திரங்களும்,சிறுபான்மையினர் இனத்தைச் சார்ந்த ஏழை, எளிய 66 மகளிர்களுக்கு ரூ.3.32 லட்சம் மதிப்பில் தையல் இயந்திரங்களும்,உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 540 உறுப்பினர்களுக்கு ரூ.35.30 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளும், 605 பயனாளிகளுக்கு முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் ரூ.75.40 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும்,195 பயனாளிகளுக்கு கிறுஸ்தவ மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் ரூ.34.20 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும்,2021 முதல் 2023-2024ம் கல்வியாண்டு 4,898 பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மாணவ,மாணவிகளுக்கு ரூ.1.52 கோடி கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டள்ளது.

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் வழங்கப்பட்டுள்ளது. 133 பயனாளிகளுக்கு ரூ.2.69 கோடி கடன் உதவிகளும்,தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் 213 பயனாளிகளுக்கு ரூ.2.27 கோடி தொழில் தொடக்க கடனுதவிகளும் என மொத்தம் 13,946 பயனாளிகளுக்கு ரூ.10.91 கோடி மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு,நீலகிரி மாவட்டத்திலுள்ள பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட,சீரமரபினர் மற்றும் சிறுபான்மையின சமூகத்தினர் பயன்பெறும் வகையில் இதுபோன்ற பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தியதின் காரணமாக, அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்ததையொட்டி, தமிழ்நாடு அரசிற்கு நெஞ்சம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

The post பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் 14 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.10.91 கோடியில் நலத்திட்ட உதவி appeared first on Dinakaran.

Related Stories: