கொள்ளிடம், ஆக. 27: கொள்ளிடம் அருகே குமிளங்காடு சுயம்பு ஆதி நாகாத்தம்மன் கோயிலில் நடைபெற்ற விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே குமிளங்காடு கிராமத்தில் பழமை வாய்ந்த சுயம்பு ஆதி நாகாத்தம்மன் கோயில் அமைந்துள்ளது. பக்தர்கள் வேண்டுவனவற்றை வேண்டிய மாத்திரத்தில் அருளும் அம்பிகைக்கு ஆடி மாதம் தொடங்கி 10 நாட்கள் உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
இவ்வாண்டு திருவிழா கடந்தஆடி மாதம் 31ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து பத்து நாட்களும் பல்வேறு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. 10ம் நாள் காப்புக் கட்டிக் கொண்ட நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோட்டையா கோயிலிலிருந்து பம்பை இசைக்க தீச்சட்டி, ஆதிசக்தி கரகம், பால் குடங்கள் மற்றும் அலகு காவடிகள் எடுத்து வந்தனர். வழிநெடுகிலும் பக்தர்கள் அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர். பின்னர் அம்பாளுக்கு பால் அபிஷேகம் செய்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அம்பாளுக்கு மகா தீபாராதனை நடத்தப்பட்டது.
இதில் உள்ளூர், வெளியூர்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஆலய அறங்காவலர் தேய்வேந்த அடிகளார் மற்றும் கிராம மக்கள் சார்பில் செய்திருந்தனர்.
The post கொள்ளிடம் அருகே குமிளங்காடு சுயம்பு ஆதி நாகாத்தம்மன் கோயிலுக்கு பால்குட ஊர்வலம் appeared first on Dinakaran.