ஊராட்சி செயலர் சஸ்பெண்ட்

 

கள்ளக்குறிச்சி, ஆக. 27: சுகாதாரமற்ற குடிநீர் விநியோகம் விவகாரத்தில் ஊராட்சி செயலரை வட்டார வளர்ச்சி அலுவலர் சஸ்பெண்ட் செய்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தனக்கனந்தல் ஊராட்சியில் நேற்று முன்தினம் ஊராட்சியின் மூலம் விநியோகம் செய்த குடிநீர் குடித்ததில் 20க்கும் மேற்பட்ட மக்களுக்கு வாந்தி, பேதி, மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து அந்த ஊராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மூலம் குடிநீர் விநியோகம் செய்தது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை ஊராட்சி செயலர் ஜெகநாதன் முறையாக பராமரிக்காமல் சுகாதாரமான குடிநீர் வழங்காதது தெரியவந்தது. இதுகுறித்து கள்ளக்குறிச்சி ஊராட்சிகளின் உதவி இயக்குநர் வெங்கட்ராமன் மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அனுப்பினார். ஜெகநாதன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டி ஆட்சியர் பிரசாந்த் அதிரடியாக உத்தரவிட்டார். அதன்படி தனக்கனந்தல் ஊராட்சி செயலர் ஜெகநாதனை திருக்கோவிலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கொளஞ்சிவேலு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

மேலும் திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கோமாலூர் ஊராட்சியில் நடைபெற்றுள்ள பணிகள் குறித்து கள்ளக்குறிச்சி ஊராட்சிகளின் உதவி இயக்குநர் வெங்கட்ராமன் திடீர் ஆய்வு செய்தபோது அந்த ஊராட்சி செயலர் மனோகரன் அந்த ஊராட்சியில் பணியில் ஈடுபடாமல் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஊராட்சி செயலரை ஊராட்சி அலுவலகத்துக்கு வருமாறு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலமாக தகவல் தெரிவித்தும் அலுவலகத்துக்கு வராமல் அலட்சியமாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அந்த ஊராட்சி செயலர் மனோகரன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டி கள்ளக்குறிச்சி ஊராட்சிகளின் உதவி இயக்குநர் வெங்கட்ராமன் உத்தரவின் பேரில் ஊராட்சி செயலர் மனோகரனை சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அம்மகளத்தூர் ஊராட்சிக்கு பணியிட மாற்றம் செய்து வட்டார வளர்ச்சி அலுவலர் கொளஞ்சிவேலு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து கனக்கனந்தல் ஊராட்சி செயலர் மதியரசன் தனக்கனந்தல் ஊராட்சிக்கு கூடுதல் பொறுப்பும், மேலும் நெடுமுடியான் ஊராட்சி செயலர் வேலு கோமாலூர் ஊராட்சிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது.

The post ஊராட்சி செயலர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Related Stories: