புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி துவங்கியது

*750 பேருக்கு அமைச்சர் வழங்கினார்

கோவை : கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி பங்கேற்று பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினார்.

பின்னர், அமைச்சர் முத்துசாமி நிருபர்களிடம் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் 1,253 முழுநேர நியாயவிலைக்கடைகள், 289 பகுதி நேர நியாய விலை கடைகள் மொத்தம் 1,542 நியாய விலை கடைகள் இயங்கி வருகின்றன. கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 96 முழு நேர நியாய விலைக்கடைகள் 32 பகுதிநேர நியாய விலைக் கடைகள் புதியதாக உருவாக்கப்பட்டது. 36 பகுதி நேர நியாய விலைக்கடைகள் முழு நேர கடைகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் 54 புதிய நியாய விலைக்கடை கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன. 32 நியாய விலை கடை கட்டிடப்பணி நடைபெற்று வருகிறது. 96 புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது.

மேலும், 184 நியாயவிலைக்கடைகள் நவீன மயமாக்கப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் 11 லட்சத்து 41 ஆயிரம் 886 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு 34 லட்சம் மக்கள் பயனடைந்து வருகின்றனர். மாவட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டு முதல் சுமார் 90 ஆயிரம் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது. பொதுமக்களுக்கு குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் போன்ற சேவைகள் உடனுக்குடன் ஒப்புதல் வழங்கப்பட்டு வருகிறது.

மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்களில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் போன்ற விண்ணப்பங்களை பரிசீலனை செய்து அன்றைய தினமே தீர்வு காணப்படுகிறது.கடந்த ஜூன் 2023 முதல் பெறப்பட்ட புதிய மின்னணு குடும்ப அட்டைகள் கோரி 15,010 வரப்பெற்ற விண்ணப்பங்களில் தகுதியுள்ள 5,357 நபர்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டும், 5,444 விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

ஒப்புதல் வழங்கப்பட்ட புதிய மின்னணு குடும்ப அட்டைகளில் 1,656 குடும்ப அட்டைகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளது. மீதமுள்ள அட்டைகள் அச்சிடும்பணி நடைபெற்று வருகிறது. மேலும், ஒவ்வொரு துறையில் நடக்கும் பணிகள் ஆய்வு செய்து பணிகளை வேகப்படுத்த முதல்வர் உத்தரவிட்டு உள்ளார். இதன் ஒரு பகுதியாக மின்னணு தற்போது புதிய மின்னணு குடும்ப அட்டைகள் விநியோகம் பணிகள் துவங்கி உள்ளோம்.

இந்த விழாவில் 750 பேருக்கு அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன. விண்ணப்பித்த சிலருக்கு குறைபாடுகள் காரணமாக அட்டைகள் கிடைக்காத நிலை உள்ளது. அவர்கள் மீண்டும் மனு அளித்தால் மனு குறித்து ஆய்வு செய்து அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மகளிர் உரிமைத்தொகை ஒரு கோடி 17 லட்சம் பேருக்கு அளிக்கப்பட்டு உள்ளது. கூடுதலாக ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு அளிக்கப்பட்டது. மேலும், ரேஷன் கடைகளில் தட்டுப்பாடு 90 சதவீதம் சரி செய்யப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் கை ரேகை பதிவு ஆகாத நபர்களுக்கு கண் கருவிழி மூலம் ஸ்கேன் செய்து பொருட்கள் வழங்கப்படுகிறது.

மாநகரில் சாலைகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில், கணபதி ராஜ்குமார் எம்.பி., மேயர் ரங்கநாயகி, மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, திமுக மாவட்ட செயலாளர்கள் முன்னாள் எம்எல்ஏ நா.கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

The post புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி துவங்கியது appeared first on Dinakaran.

Related Stories: