சென்னையின் முக்கிய நீர் வழித்தடங்களான கூவம், அடையாறு ஆறுகளை மீட்டெடுக்க சாத்தியக்கூறுகள் மற்றும் திட்ட அறிக்கை: மாநகராட்சி தயாரிக்கிறது; அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு

சென்னை: சென்னையின் முக்கிய நீர்நிலைகளான கூவம், அடையாறு ஆறுகளை சீரமைத்து மீட்டெடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் திட்ட அறிக்கை தயாரிக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. கடந்த 2006-11 திமுக ஆட்சியில் துணை முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது கூவம் நதியை சீரமைத்து மீட்டெடுக்க, சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை ஒப்பந்தம் கையெழுத்திட்டது. அப்போதைய மேயர் மா.சுப்பிரமணியன் முயற்சியில் அமெரிக்க சான் ஆன்டணியோ மாகாணத்துடன் சென்னை மாநகராட்சி நீர்நிலைகள் மீட்டெடுத்தல் தொடர்பாக சகோதர ஒப்பந்தமும் கையெழுத்தானது. அதன்பின்னர் அதிமுக ஆட்சி காலத்தில் இவை அனைத்தும் கிடப்பில் போடப்பட்டன.

இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் சான் ஆன்டணியோ மகாணத்துக்குச் சென்ற மேயர் பிரியா, சகோதர ஒப்பந்தத்தை புதுப்பித்து, பின்னர் சென்னை மாநகராட்சியுடன் திட்டங்கள் பரிமாறிக்கொள்ளவும் முடிவெடுக்கப்பட்டது. இதில், சான் ஆன்டணியோவில் உள்ள நதியை மீட்டெடுத்து சுற்றுலா தலமாக மாற்றியதை போல சென்னை கூவம் நதியை சீரமைக்க ஆய்வு செய்து அறிக்கை வழங்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இது தொடர்பாக, சர்வதேச சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் அறிவியல் விவரங்களுக்கான அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ஜெனிபர் லிட்டில் ஜான், அமெரிக்க துணை தூதர் கிறிஸ் ஹொட்ஜாஸ் உள்ளிட்ட அமெரிக்க பிரதிநிதிகள் சென்னை வந்துள்ளனர். மேயர் பிரியா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ரிப்பன் மாளிகையில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

இக்கூட்டத்தில், சென்னை மாநகராட்சியின் நிலப்பரப்பு, 2015ம் ஆண்டு முதல் 2023 வரை சென்னையின் மழைப்பொழிவு அளவு, சென்னையின் படுகைகளில் 2005, 2008, 2015, 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள், அதனை தடுக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள், படுகைகளில் உள்ள ஆறுகள் மற்றும் மழைநீர் வடிகால் கட்டமைப்புகள், சென்னை படுகைகளில் உள்ள துணை படுகைகள், நகர்ப்புற வெள்ள மேலாண்மையில் உள்ள சவால்கள், சென்னை படுகையின் நீரியல் அம்சங்கள், வெள்ளம் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள், சென்னையின் படுகைகள் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் வெள்ள பாதிப்பை நிர்வகிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் மழைநீர் வடிகால் கட்டமைப்புகள், 2021ம் ஆண்டு வெள்ளத்திற்கு பிறகு தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள், சென்னையை நீர்உறிஞ்சும் நகரமாக மாற்ற பூங்காக்களில் அமைக்கப்பட்டு வரும் ஸ்பாஞ்ச் பூங்காக்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

அதேபோல், கூவம் மற்றும் அடையாறு ஆற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு பணி மற்றும் இதற்காக பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் சென்னையின் நீர்வழித்தடங்கள், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் அடையாறு, கூவம் மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய்கள் மற்றும் அதன் வடிகால்களில் கழிவுநீர் வெளியேறுவதை குறைக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், நீர்நிலைகளில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை மற்றும் கழிவுகளை அகற்ற மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மேயர் பிரியா தலைமையில் பெருங்கடல்கள், சர்வதேச சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் விவகாரங்களுக்கான அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சர் (பொ) மற்றும் சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதர் ஆகியோர் அடங்கிய குழுவினர், நேப்பியர் பாலம் அருகில் கூவம் ஆறு கடலில் கடக்கும் இடத்தையும், சிவானந்தா சாலை கூவம் ஆற்றின் நீர்வழி தடத்தையும் பார்வையிட்டனர். இதனை தொடர்ந்து, முதலமைச்சரின் கனவு திட்டமான கூவம் நதி மீட்டெடுத்தல் உள்ளிட்ட சென்னையின் முக்கிய நீர்நிலைகளை சீரமைத்து மீட்டெடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் திட்ட அறிக்கை தயாரிக்கவும் சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post சென்னையின் முக்கிய நீர் வழித்தடங்களான கூவம், அடையாறு ஆறுகளை மீட்டெடுக்க சாத்தியக்கூறுகள் மற்றும் திட்ட அறிக்கை: மாநகராட்சி தயாரிக்கிறது; அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: