அதிக வட்டி தருவதாக ரூ.4620 கோடி மோசடி ஹிஜாவு நிதி நிறுவன இயக்குநரின் ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஹிஜாவு நிதி நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான கலைச்செல்வி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை மூன்றாவது முறையாக தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த ஹிஜாவு நிதி நிறுவனம் 15 சதவீத வட்டி தருவதாகக் கூறி பொதுமக்களிடம் இருந்து சுமார் 4,620 கோடி ரூபாய் முதலீடுகள் பெற்று மோசடி செய்துள்ளது. இதுகுறித்து பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து, இதுவரை 14 பேரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில், நிறுவன இயக்குநர் அலெக்சாண்டர் மற்றும் முகவர்கள் உள்ளிட்ட 15 பேர் தலைமறைவாக உள்ளனர். இவர்களுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நிறுவன இயக்குநர்களில் ஒருவரான கலைச்செல்வி, தனது கணவர் ரவிச்சந்திரன் பெயரில் ஆர்.எம்.கே.பிரதர்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி, ஹிஜாவு நிறுவனத்துக்காக முதலீடுகளை ஈர்த்ததாக கடந்த ஏப்ரல் முதல் வாரம் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை நிதி நிறுவன மோசடி வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து கலைச்செல்வி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை கடந்த முறை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், மூன்றாவது முறையாக கலைச்செல்வி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, ஹிஜாவு நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான கலைச்செல்வியின் ஜாமீன் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

The post அதிக வட்டி தருவதாக ரூ.4620 கோடி மோசடி ஹிஜாவு நிதி நிறுவன இயக்குநரின் ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: