கழிவுநீர் இணைப்புகளை பராமரிப்பது குறித்த செய்முறை பயிற்சி ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தப்பட்ட 2 பாதுகாப்பு கவச உடை: மாநகராட்சி அதிகாரிகளிடம் மேயர் வழங்கினார்

ஆவடி, ஆக. 22: கழிவு நீர் இணைப்புகளை பராமரிப்பது குறித்த செய்முறை பயிற்சி கூட்டத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தப்பட்ட 2 பாதுகாப்பு கவச உடைகளை மாநகராட்சி அதிகாரிகளிடம் மேயர் வழங்கினார். ஆவடி அருந்ததிபுரத்தை சேர்ந்த கோபிநாத்(25). இவர், கடந்த 11ம் தேதி சரஸ்வதி நகரில் பாதாள சாக்கடை அடைப்பை நீக்கும் பணியின்போது விஷவாயு தாக்கி உயிரிழந்தார். அரசு சார்பில் அவரது குடும்பத்துக்கு கடந்த வாரம் ₹41 லட்சம் இழப்பீடும், மனைவிக்கு ஜூனியர் அசிஸ்டண்ட் பணியும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமார் தலைமையில், பாதுகாப்பான முறையில் கழிவுநீர் இணைப்புகளை பராமரிப்பது குறித்த செய்முறை பயிற்சி கூட்டம் நேற்று ஆவடி மாநகராட்சி அருகே நடைபெற்றது. இதில், ஆவடி மாநகராட்சி ஆணையர் எஸ்.கந்தசாமி, தீயணைப்புத் துறை மாவட்ட அலுவலர் தென்னரசு, சென்னை மெட்ரோ குடிநீர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில், தூய்மை பணியாளர்கள் பாதுகாப்பான முறையில் பணியை செய்யும் வகையில், ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தப்பட்ட 2 புதிய பாதுகாப்பு கவச உடைகளை ஆவடி மேயர் உதயகுமார், மாநகராட்சி அதிகாரிகளிடம் வழங்கினார்.

இந்த கூட்டத்தில், தூய்மை பணியாளர்கள், பாதாள சாக்கடைக்குள் இறங்கி, சுத்தம் செய்ய கூடாது, அவ்வாறு சுத்தம் செய்யும் சூழ்நிலை ஏற்பட்டாலும், ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தப்பட்ட பாதுகாப்பு கவச உடையினை உடுத்திக்கொண்டு பணியினை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர். மேலும் தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பு உடைகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று செயல்முறை விளக்கம் செய்து மூலம் செய்து காட்டினார். சென்னை மெட்ரோ குடிநீர் அதிகாரிகள், பணியாளர்களுக்கு காணொளி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

The post கழிவுநீர் இணைப்புகளை பராமரிப்பது குறித்த செய்முறை பயிற்சி ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தப்பட்ட 2 பாதுகாப்பு கவச உடை: மாநகராட்சி அதிகாரிகளிடம் மேயர் வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: