3 நாள் அரசு முறை பயணம் தொடங்கியது போலந்து சென்றார் பிரதமர் மோடி: ரயில் மூலம் நாளை உக்ரைன் செல்கிறார்

புதுடெல்லி: பிரதமர் மோடி தனது 3 நாள் அரசு முறை பயணத்தின் முதல் கட்டமாக போலந்து நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். நாளை அவர் ரயில் மூலம் உக்ரைன் செல்கிறார்.ரஷ்யா, உக்ரைன் நாடுகள் இடையே கடந்த 2 ஆண்டுகளாக போர் நீடிக்கிறது. இப்போருக்குப் பிறகு சமீபத்தில் முதல் முறையாக ரஷ்யா சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து, யுத்த களத்தில் எந்த பிரச்னைக்கும் தீர்வு காண முடியாது என இந்தியாவின் நிலைப்பாட்டை வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து, 3 நாள் அரசு முறைப் பயணமாக போலந்து, உக்ரைன் நாடுகளுக்கு செல்ல பிரதமர் மோடி திட்டமிட்டார். அதன்படி, பயணத்தின் முதல் கட்டமாக டெல்லியில் இருந்து போலந்து நாட்டு தலைநகர் வார்சாவுக்கு நேற்று காலை அவர் புறப்பட்டுச் சென்றார்.

வார்சா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய்க்குப் பிறகு 45 ஆண்டுகள் கழித்து போலந்து செல்லும் முதல் பிரதமர் மோடி ஆவார். வார்சாவில் அவர் போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க், அதிபர் ஆண்ட்ரீஸ் டூடா ஆகியோரை சந்தித்து இருதரப்பு உறவு மற்றும் வர்த்தகத்தை வலுப்படுத்துவது குறித்து பேசுகிறார். மேலும், போலந்து தொழில் நிறுவன தலைவர்களை சந்தித்து இந்தியாவில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கும் மோடி, அங்கு வாழும் இந்திய வம்சாவளிகளையும் சந்தித்து பேச உள்ளார்.அதைத் தொடர்ந்து, நாளை அவர் உக்ரைன் நாட்டிற்கு செல்கிறார். வார்சாவில் இருந்து ‘ரயில் போர்ஸ் ஒன்’ எனும் சொகுசு ரயில் மூலம் 10 மணி நேரம் பயணம் செய்து உக்ரைன் தலைநகர் கீவ்வை பிரதமர் மோடி சென்றடைவார்.

அங்கு உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேச உள்ளார். அப்போது, ரஷ்யா, உக்ரைன் போர் விவகாரம் குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உக்ரைன் கடந்த 1991ம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பிறகு இந்திய பிரதமர் ஒருவர் அந்நாட்டிற்கு செல்வது இதுவே முதல் முறை என்பதால் மோடியின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும், ரஷ்யா, உக்ரைன் போருக்கு மத்தியில் உக்ரைன் சென்ற அமெரிக்க அதிபர் பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட உலக தலைவர்கள் வரிசையில் பிரதமர் மோடியும் இணைய உள்ளார்.

* நண்பனாக, கூட்டாளியாக அமைதி திரும்ப விருப்பம்

போலந்து புறப்படும் முன்பாக பிரதமர் மோடி விடுத்த அறிக்கையில், ‘போலந்துக்கான எனது பயணம் இரு நாடுகளுக்கு இடையேயான தூதரக உறவுகளில் 70வது ஆண்டினைக் குறிப்பதாகும். ஜனநாயகம், பன்மைத்துவத்திற்கான எங்களின் பரஸ்பர உறுதிப்பாட்டை இந்த நட்புறவு மேலும் வலுப்படுத்தும். மேலும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அழைப்பின் பேரில் அந்நாட்டிற்கு நான் பயணம் செய்ய இருக்கிறேன். ஜெலன்ஸ்கி உடனான சந்திப்பை நான் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். நண்பனாகவும், கூட்டாளியாகவும் உக்ரைனில் அமைதியும், நிலைத்தன்மையும் விரைவில் திரும்பும் என்று நாங்கள் நம்புகிறோம்’ என குறிப்பிட்டுள்ளார்.

The post 3 நாள் அரசு முறை பயணம் தொடங்கியது போலந்து சென்றார் பிரதமர் மோடி: ரயில் மூலம் நாளை உக்ரைன் செல்கிறார் appeared first on Dinakaran.

Related Stories: