வயநாடு நிலச்சரிவில் சிக்கி 17 குடும்பத்தை சேர்ந்த 65 பேர் ஒட்டுமொத்தமாக பலி

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சூரல்மலை, முண்டக்கை ஆகிய இடங்களில் கடந்த மாதம் 30ம் தேதி நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் இருந்து மக்கள் இன்னும் மீளவில்லை. இந்த நிலச்சரிவில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 450ஐ நெருங்கி உள்ளது. இதுவரை 231 உடல்களும், 212 உடல் பாகங்களும் மீட்கப்பட்டு உள்ளன. இன்னும் 128 பேரை காணவில்லை. இந்த பயங்கர நிலச்சரிவில் ரூ.1200 கோடிக்கு சேதம் ஏற்பட்டு உள்ளதாகவும், 1555 வீடுகள் வசிக்கவே முடியாத அளவுக்கு உருக்குலைந்து விட்டதாகவும் கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது.

நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட 729 குடும்பத்தினர் பல்வேறு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் பல குடும்பங்கள் உறவினர் வீடுகளுக்கும், அரசு ஏற்பாடு செய்த வாடகை வீடுகளுக்கும் சென்று விட்டனர். தற்போது 219 குடும்பத்தினர் நிவாரண முகாம்களில் உள்ளனர். இந்தநிலையில் நிலச்சரிவில் 17 குடும்பங்கள் ஒட்டு மொத்தமாக பலியாகி இருப்பது தெரியவந்து இருக்கிறது. இந்தக் குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 65 பேர் உயிரிழந்து உள்ளனர். இதில் 5 குடும்பத்தினரின் நெருங்கிய உறவினர்கள் யார்? என்று கூட கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதற்காக டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

* புஞ்சிரிமட்டம், முண்டக்கையில் இனி வசிக்க முடியாது
வயநாட்டில் நிலச்சரிவு உருவான புஞ்சிரிமட்டம் பகுதி யில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் சுற்றுலா விடுதிகள் இருந்தன. இவை அனைத்துமே நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டன. இதேபோல் முண்டக்கை பகுதியிலும் நூற்றுக்கணக்கான வீடுகளும், தோட்டங்களும், குடியிருப்புகளும் இருந்தன. இவை எதுவுமே இப்போது இருந்த இடம் தெரியாமல் ஆகிவிட்டது. இந்த 2 பகுதிகளிலும் இனி வீடு கட்டி வசிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

The post வயநாடு நிலச்சரிவில் சிக்கி 17 குடும்பத்தை சேர்ந்த 65 பேர் ஒட்டுமொத்தமாக பலி appeared first on Dinakaran.

Related Stories: