இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகள் உயிர்மச்சான்று பெற விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகள் உயிர்மச்சான்று பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் தேசிய உயிர்ம வேளாண்மை செயல்திட்ட வழிமுறைகளின்படி திருவள்ளுர் மாவட்டத்தில் உயிர்மச்சான்று செயல்படுத்தப்பட்டு வருகிறது. இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகள் தனிநபராகவோ, குழுவாகவோ, வணிக நிறுவனமாகவோ பதிவு செய்துகொள்ளலாம். உயிர்ம விளைபொருட்களை பதன் செய்வோரும் ஏற்றுமதி செய்வோரும் பதிவு செய்யலாம். தனிநபர் சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.2700ம், தனிநபர் பிற விவசாயிகளுக்கு ரூ.3200ம், குழுவாக பதிவு செய்தால் ரூ.7200ம், வணிக நிறுவனமாக பதிவு செய்தால் ரூ.9400ம் பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் விவசாயிகள், விண்ணப்பப் படிவம், நிரந்தர கணக்கு எண் அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பண்ணையின் பொது விவர குறிப்பு, பண்ணையின் வரைபடம், மண் மற்றும் நீர் பரிசோதனை விவரங்கள், ஆண்டு பயிர் திட்டம், துறையுடனான ஒப்பந்தம், நில ஆவணம் (சிட்டா நகல்) ஆகியவற்றை 3 நகல்களிலும், கடவுச் சீட்டு அளவு புகைப்படம் இரு நகல்களிலும் சமர்ப்பிக்க வேண்டும். மேற்காணும் விண்ணப்பப் படிவங்களை www.tnocd.net என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு திருவளூர், பெரியகுப்பம், 6/24, லால் பகதூர் சாஸ்திரி தெருவில் உள்ள விதைச்சான்று மற்றும் உயிர்மச்சான்று உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, திருவள்ளுர் மாவட்ட விதைச்சான்று மற்றும் உயிர்மச்சான்று உதவி இயக்குநர் ஸ்ரீதேவி தெரிவித்துள்ளார்.

The post இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகள் உயிர்மச்சான்று பெற விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: