டெல்லி: தமிழ்நாட்டில் ரயில்வே மேம்பாட்டுக்காக தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ரூ.6,362 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். தெற்கு ரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைந்திருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் புதிய வழித்தடங்கள், இரட்டை பாதை, வாடிக்கையாளர்களுக்கான வசதிகள் தொடர்பான திட்டங்களுக்கு போதுமான அளவிற்கு நிதி ஒதுக்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும் என்று ஒன்றிய ரயில்வே துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில் இதற்கு பதிலளித்த ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்; தமிழ்நாட்டில் ரயில்வே மேம்பாட்டுக்காக தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ரூ.6,362 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆண்டுக்கு சராசரியாக ஒதுக்கீடு செய்த ரூ.879 கோடியை விட 7 மடங்கு அதிகம். 2,749 ஹெக்டேர் நிலம் தேவைப்பட்ட நிலையில், இதுவரை 807 ஹெக்டேர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துவதற்கு, தமிழ்நாடு அரசு ஆதரவளித்தால் மட்டுமே திட்டங்களை விரைவாக நிறைவேற்ற முடியும்.
நிலம் கையகப்படுத்துவதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.
The post தமிழ்நாட்டில் ரயில்வே மேம்பாட்டுக்காக தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ரூ.6,362 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது: அஸ்வினி வைஷ்ணவ் தகவல் appeared first on Dinakaran.