நெய்வேலி, ஆக. 20: நெய்வேலி என்எல்சி இரண்டாவது சுரங்கத்தில் மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் சுரங்கத்தின் நுழைவு வாயில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது இரண்டாம் சுரங்க நுழைவு வாயில் அருகே பாதுகாப்பு ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையில் வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். இதில் சுரங்க பகுதியில் இருந்து வெளியே வந்த வாகனத்தை மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் சோதனை செய்ததில் அதில் இரும்பு பிளேட்டுகள் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அதில் இருந்த 2 பேரையும், அந்த வாகனத்தை மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் மந்தாரக்குப்பம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை செய்ததில் தஞ்சாவூர் மாவட்டம், தத்துவாஞ்சேரி பகுதியை சேர்ந்த சுப்ரமணியன் மகன் இளவரசன் (38), வடலூர் அடுத்த மருவாய் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியராஜ் மகன் அஜித் லிவிங்ஸ்டன் (27) என்பதும், என்எல்சியிலிருந்து இரும்பு பிளேட்டுகளை திருடி வந்ததை ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து போலீசார் அவர்களிடமிருந்து ரூ.ஒரு லட்சம் மதிப்புள்ள இரும்பு பிளேட்டுகள் மற்றும் திருட்டு சம்பவத்திற்கு பயன்படுத்திய ஜீப்பை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
The post என்எல்சி 2வது சுரங்க பகுதியில் இரும்பு பிளேட் திருடிய 2 பேர் கைது appeared first on Dinakaran.