விவசாயிகளுடன் ஆர்ப்பாட்டத்துக்கு சென்ற பி.ஆர்.பாண்டியன் கைது

காட்டுமன்னார்கோவில், டிச. 27: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் சுற்று வட்டாரத்தில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் மழை வெள்ளத்தால் பயிர்கள் பாதிக்கப்பட்டது. இதை சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் நேரடியாக ஆய்வு செய்தார். இதையடுத்து விவசாயிகளுக்கு ஆதரவாக காட்டுமன்னார்கோவில் சீரணி அரங்கம் அருகே நேற்று பிஆர் பாண்டியன் மற்றும் தமிழ்நாடு ஐக்கிய விவசாயிகள் சங்கத்தினர், விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்ய திரண்டனர். தகவல் கிடைத்துவந்த சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி விஜிகுமார் தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

இதனையடுத்து பி.ஆர்.பாண்டியன், மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், கவுரவ தலைவர் லட்சுமிகாந்தன், மாவட்ட தலைவர் கண்ணன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் உள்பட 200க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்து வேனில் அழைத்து சென்று அங்குள்ள மண்டபத்தில் அடைத்தனர். இதனால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து பிஆர் பாண்டியன் கூறுகையில், இப்பகுதியில் பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கி விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு மீண்டும் கணக்கெடுத்து உரிய அறிக்கையை அதிகாரிகள் அளித்து உரிய காப்பீடு வழங்க வேண்டுமென நாங்கள் வலியுறுத்துகிறோம். மேலும் சிறப்பு பெருந்திட்ட நிதியின் அடிப்படையில் வீராணம் ஏரியை தூர்வாரி மதகுகளை சரி செய்து மீண்டும் வெள்ளத்தால் காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், புவனகிரி உள்ளிட்ட பகுதிகள் பாதிக்கப்படாத வகையில் சரிசெய்ய வேண்டும் என்றார்.

The post விவசாயிகளுடன் ஆர்ப்பாட்டத்துக்கு சென்ற பி.ஆர்.பாண்டியன் கைது appeared first on Dinakaran.

Related Stories: