திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் தீ விபத்து: முக்கிய கோப்புகள் சேதம்

திருமலை: திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் முக்கிய கோப்புகள் எரிந்து சேதமானது. திருப்பதியில் உள்ள திருமலை தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் இன்ஜினியரிங் அலுவலக பிளாக்கில் நிர்வாக பொறியாளருக்கு தனிஅறை உள்ளது. இந்த அறையில் நேற்றிரவு திடீரென தீப்பிடித்தது. தீ மளமளவென பரவி அங்குள்ள கோப்புகளில் தீப்பற்றியது. இதனை கண்ட ஊழியர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல முக்கிய கோப்புகள் எரிந்து சேதமானது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தீ விபத்து குறித்து முதன்மை பாதுகாப்பு அதிகாரி தர் நிருபர்களிடம் கூறுகையில், தேவஸ்தான இன்ஜினியரிங் பிளாக்கில் தீ பிடித்தது. இருப்பினும் அனைத்து கோப்புகளும் டிஜிட்டல் இ.பைலிங் செய்யப்பட்டுள்ளது. ஆய்வுக்காக வைத்திருந்த கோப்புகள் மட்டுமே எரிந்தது. எனவே எந்த பாதிப்பும் இல்லை. இன்று(நேற்று) சனிக்கிழமை என்பதால் அலுவலகத்தில் பூஜை செய்தபோது தீப்பிடித்ததாக கூறுகின்றனர். இருப்பினும் தீவிர விசாரணைக்கு பிறகு முழுவிவரம் தெரியும் என்றார். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் இன்ஜினியரிங் துறையில் கடந்த ஆட்சியில் தேர்தலுக்கு முன் ₹1500 கோடிக்கும் மேல் பணிகளுக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டது.

இதில் அப்போதைய ஆளும் கட்சி மற்றும் அறங்காவலர் குழுவினர் பயன்பெறும் விதமாக பலகோடி முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது. இதனால் விஜிலென்ஸ் விசாரணைக்கு முதல்வர் சந்திரபாபு உத்தரவிட்டிருந்தார். இதுதொடர்பாக கடந்த சில வாரங்களாக விசாரணை நடந்து வரும் நிலையில் இன்ஜினியரிங் அறையில் தீ விபத்து ஏற்பட்டு முக்கிய கோப்புகள் எரிந்து சேதமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் தீ விபத்து: முக்கிய கோப்புகள் சேதம் appeared first on Dinakaran.

Related Stories: