நடிகர்கள் மீதான புகார்கள் அதிகரித்து வரும் நிலையில் சினிமா பெண் கலைஞர்கள் அமைப்பினர் பினராயி விஜயனுடன் திடீர் சந்திப்பு: ரேவதி, ரீமா கல்லிங்கல் பங்கேற்பு

திருவனந்தபுரம்: மலையாள நடிகர்கள், இயக்குனர்களுக்கு எதிரான பாலியல் புகார்கள் அதிகரித்து வரும் நிலையில் நேற்று சினிமா பெண் கலைஞர்கள் அமைப்பினர் பினராயி விஜயனை சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு பிரபல மலையாள சினிமா நடிகை ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்திற்குப் பின் தான் மலையாள சினிமாவில் ‘உமென் இன் சினிமா கலெக்டிவ்’ என்ற பெயரில் ஒரு பெண் கலைஞர்கள் அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் நடிகைகள் ரேவதி, ரீமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன், மஞ்சு வாரியர் மற்றும் பலர் உறுப்பினர்களாக உள்ளனர்.

கடந்த 2017ம் ஆண்டு இந்த அமைப்பினர் கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து தான் மலையாள சினிமாவில் நடிகைகள் உள்பட பெண் கலைஞர்கள் அனுபவிக்கும் பாலியல் கொடுமைகளை குறித்து விசாரிப்பதற்காக ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது. சமீபத்தில் இந்த ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி மலையாள சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஹேமா கமிட்டியின் முழு அறிக்கையையும் சிறப்பு விசாரணைக் குழுவிடம் ஒப்படைக்க கேரள அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று மலையாள சினிமா பெண் கலைஞர்கள் அமைப்பினர் திடீரென முதல்வர் பினராயி விஜயனை சந்தித்தனர். நடிகைகள் ரேவதி, ரீமா கல்லிங்கல், இயக்குனர்கள் தீதி தாமோதரன், பீனா பால் ஆகியோர் இந்த சந்திப்பில் உடனிருந்தனர். இதன் பிறகு நடிகை ரீமா கல்லிங்கல் கூறியது: ஹேமா கமிட்டியில் தொடர் நடவடிக்கைகள் எடுப்பது குறித்து எங்களது கருத்துக்களை கூறுவதற்காக முதல்வரை சந்தித்தோம்.
தற்போது மலையாள சினிமாவில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளை எவ்வாறு தீர்ப்பது என்பது குறித்து நாங்கள் தீவிரமாக ஆலோசித்து வருகிறோம். கமிட்டி அறிக்கையில் வாக்குமூலம் கொடுத்த நடிகைகளின் ெபயர் விபரங்களை வெளியிடக்கூடாது என்று முதல்வரிடம் வலியுறுத்தினோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post நடிகர்கள் மீதான புகார்கள் அதிகரித்து வரும் நிலையில் சினிமா பெண் கலைஞர்கள் அமைப்பினர் பினராயி விஜயனுடன் திடீர் சந்திப்பு: ரேவதி, ரீமா கல்லிங்கல் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: