வெள்ள பாதிப்புக்கு நிதி வழங்காமல் ஆந்திராவுக்கு பாரபட்சம் காட்டும் ஒன்றிய அரசு: காங்கிரஸ் தலைவர் ஷர்மிளா காட்டம்


திருமலை: வெள்ள பாதிப்புக்கு நிதி வழங்காமல் ஆந்திர மக்களுக்கு ஒன்றிய பாஜ அரசு பாரபட்சம் காட்டுவதாக அம்மாநில காங்கிரஸ் தலைவர் ஷர்மிளா குற்றம்சாட்டி உள்ளார். ஆந்திர மாநிலம் என்.டி.ஆர். மாவட்டம் விஜயவாடா பழைய ராஜராஜேஸ்வரிபேட்டையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மாநில காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் நிருபர்களிடம் ஷர்மிளா கூறியதாவது: முதல்வர் சந்திரபாபுநாயுடு வெள்ள பாதிப்பிற்கு ஒன்றிய பாஜ அரசிடம் அழுத்தம் கொடுத்து ₹10 ஆயிரம் கோடி பெற வேண்டும்.

கடந்த 2 வாரங்களாக இங்குள்ள மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். வெள்ளத்தில் சிக்கி இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 7 லட்சம் பேர் வீடற்றவர்களாக மாறியுள்ளனர். விஜயவாடா நமது தலைநகரம். இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டாலும் ஆட்சியாளர்கள் தூங்குகிறார்கள். வெள்ளத்தால் ₹6,800 கோடி இழப்பு ஏற்பட்டதாக சந்திரபாபு கூறுகிறார். அவர் சொன்ன நஷ்டத்தில் இதுவரை ஒரு ரூபாய் கூட ஒன்றிய அரசு தரவில்லை. ஒன்றிய அமைச்சர், அதிகாரிகள் வருகிறார்கள். சேத மதிப்பீடு என்று பார்வையிட்டு சென்ற பின்னரும் 1 ரூபாய் கூட ஒன்றிய அரசிடம் இருந்து வரவில்லை. பீகாரில் சாலைகளுக்கு ₹10 ஆயிரம் கோடி வழங்கப்பட்டது.

ஆனால் ஆந்திரா மீது ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டுகிறது. இவ்வளவு சேதாரம் ஏற்பட்டுள்ளது. இதை பார்வையிட குறைந்தபட்சம் பிரதமர் மோடி வரவில்லை. ஒவ்வொரு நாடாக பயணம் செய்கிறார். ஆந்திர எம்.பி.க்களின் ஆதரவுடன் மோடி ஆட்சியை அனுபவிக்கிறார். இதுபோன்ற பேரழிவில் கூட மோடி எந்தவித அறிவிப்பும் வழங்கவில்லை. பாஜவின் மோசடிக்கு சந்திரபாபு பதில் சொல்ல வேண்டும். குடிநீரின்றி மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். வெள்ளத்தால் வீட்டில் இருந்த அனைத்தையும் இழந்துவிட்டு நடுத்தெருவிற்கு வந்துள்ளனர். டேங்கர் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அது முழு பகுதிக்கும் சென்றடையவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

The post வெள்ள பாதிப்புக்கு நிதி வழங்காமல் ஆந்திராவுக்கு பாரபட்சம் காட்டும் ஒன்றிய அரசு: காங்கிரஸ் தலைவர் ஷர்மிளா காட்டம் appeared first on Dinakaran.

Related Stories: