கோவை: ரூ.100 கோடி வரைக்குமான தொழில் திட்டத்திற்கான வங்கிக்கடனுக்கு அடமானம் இல்லாமல், சுய நிதி உத்தரவாதம் வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். கோவை கொடிசியா வளாகத்தில் நேற்று கொங்கு மண்டல தொழில்துறையுடனான கலந்துரையாடல் கூட்டம் நேற்று நடந்தது. இதில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: தொழில் வளர்ச்சிக்கு நல்ல அனுகூலமான மண்டலம் கோவையாக உள்ளது. மைக்ரோ தொழில்களுக்கு சிட்பி வங்கி கிளையில் கடன் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த பட்ஜெட்டில் சிறு, குறு தொழில்களுக்கு பல சலுகைகள், திட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ரூ.100 கோடி வரைக்குமான தொழில் திட்டத்திற்கான வங்கிக்கடனுக்கு அடமானம் இல்லாமல், சுய நிதி உத்தரவாதம் வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முத்ரா வங்கியில் வழங்கப்பட்ட 10 லட்ச ரூபாய் கடனை, 20 லட்சமாக உயர்த்தி வங்கி கடன் கொடுக்கப்படுகிறது.
இந்தியாவில் 100 நகரங்களில் பிளக் ஆன் பிளே முறையில் தொழில் துறை பார்க் அமைக்கப்படும். காய்கறிகளை பாதுகாக்க உரிய திட்டங்களும் பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தபட்டுள்ளது. முதல் முறையாக வேலைக்கு வருபவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். இதற்காக புதிய திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்தந்த மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஐடி நிறுவனங்களை மேம்படுத்தி நவீன வசதிகள் செய்து கொடுக்கவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில் துறையினரிடம் அதிகாரிகள் மனுக்களை வாங்கி சென்றனர். டெல்லி சென்றதும் இது குறித்து அதிகாரிகளிடம பேசி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
The post ரூ.100 கோடி வரை தொழில் திட்டத்திற்கு அடமானமின்றி சுய நிதி உத்தரவாதம்: ஒன்றிய நிதியமைச்சர் பேச்சு appeared first on Dinakaran.