சீனர்கள் தொடர்புடைய சூதாட்ட செயலி மூலம் ரூ.400 கோடி மோசடி வழக்கில் தமிழக இன்ஜினியர் உட்பட 4 பேர் கைது: அமலாக்கத்துறை நடவடிக்கை

புதுடெல்லி: சீன நாட்டினரின் தொடர்புடைய ஆன்லைன் சூதாட்ட செயலி மூலம் ரூ.400 கோடி மோசடி செய்த வழக்கில் தமிழ்நாட்டை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் உட்பட 4 பேரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. இதுகுறித்து அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: பீவின் என்ற செயலி தொடர்பான வழக்கில் ஒடிசாவை சேர்ந்த அருண் சாகு, அலோக் சாகு, பாட்னாவை சேர்ந்த சேத்தன் பிரகாஷ், சென்னையை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ஜோசப் ஸ்டாலின் ஆகியோர் பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆன்லைன் சூதாட்ட செயலி தொடர்பாக கொல்கத்தாவில் உள்ள காசிப்பூர் போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து பெயர் தெரியாத நபர்கள் மீது மோசடி மற்றும் சதி திட்டத்தின் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பைவின் ஆன்லைன் சூதாட்ட செயலி மூலம் ரூ.400 கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளது.அந்த பணம் சீன நாட்டை சேர்ந்தவர்களின் 8 வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது.

பைவின் சூதாட்ட செயலி மோசடியில் 4 பேரும் முக்கிய நபர்களாக செயல்பட்டுள்ளனர். இதையடுத்து 4 பேரும் பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 4 பேரும் கொல்கத்தாவில் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 14 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.

* முதலீடு திட்ட மோசடி ரூ.29 கோடி சொத்து பறிமுதல்
நாடு முழுவதும் பொன்சி முதலீடு திட்ட மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பியர்ல்வைன்இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் நிறுவனம் சார்பில் முதலீட்டு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் 80 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் உறுப்பினராவதற்கு தலா ரூ.2250 வசூலிக்கப்பட்டுள்ளது.

இதில் மோசடி நடந்ததாக மேகாலயா போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இதையடுத்து இந்த வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இந்த நிலையில்,முதலீட்டு இணையதளத்தின் ரூ.29 கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

The post சீனர்கள் தொடர்புடைய சூதாட்ட செயலி மூலம் ரூ.400 கோடி மோசடி வழக்கில் தமிழக இன்ஜினியர் உட்பட 4 பேர் கைது: அமலாக்கத்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: