5,769 பேருக்கு ₹123.66 கோடி கல்விக்கடன்

கிருஷ்ணகிரி, ஆக.14: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் 5,769 மாணவ, மாணவிகளுக்கு ₹123.66 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டு உள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல், தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியை பெருக்குவதிலும், குறிப்பாக இளைஞர்கள் உயர்கல்வி பெறும் வாய்ப்புகளை உயர்த்துவதிலும், மிகுந்த அக்கறை செலுத்தி வருகிறார். இல்லம் தேடிக் கல்வி, முதலமைச்சரின் காலை உணவு திட்டம், நான் முதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக பள்ளிக் கல்வித்துறைக்கு இவ்வாண்டு மட்டும் ₹44 ஆயிரத்து 44 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். அத்துடன் தற்போது 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் உயர்கல்வியை தொடர, தமிழ்ப் புதல்வன் திட்டத்தை கடந்த 9ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோயம்புத்தூரில் துவக்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 54 கல்லூரிகளில் பயிலும் 6,270 மாணவ, மாணவிகள் பயனடைய உள்ளனர். இந்த திட்டம் பொருளாதார வசதி குறைவு உட்பட பல்வேறு காரணங்களால், பள்ளி படிப்பிற்கு பின் உயர் கல்வியை தொடர முடியாத நிலையில் இருந்த மாணவர்கள், உயர்கல்வியில் சேர உறுதுணையாக இருக்கும். அத்துடன் கல்லூரி செல்லும் மாணவர்களின் உள்ளங்களில் தன்னம்பிக்கை, கற்கும் ஆர்வத்தையும் பெருக்குகிறது. உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்துகிறது. குறிப்பாக தமிழக முதல்வர் கொண்டுவந்த புதுமைப் பெண் திட்டத்தின் மூலமாக உயர்கல்வியில் மாணவிகளின் சேர்க்கை விகிதம் 34 சதவீதமாக உயர்ந்துள்ளது.

அதேபோல் உயர் கல்வியில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 20240-25ம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் 1,736 பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 155 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சீருடைகள் வழங்கப்பட்டுள்ளது. கல்வியில் பின்தங்கியுள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
உயர்கல்வியை சிறப்பான முறையில் தொடர்ந்திட வசதியாக கல்விக்கடனும் அதிக அளவில்
வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, கடந்த 2021 -22ம் நிதியாண்டில் 1,520 மாணவ, மாணவிகளுக்கு ₹25.19 கோடியும், 2022 -23ம் நிதியாண்டில் 1,741 மாணவ, மாணவிகளுக்கு ₹31.95 கோடியும், 2023 -24ம் நிதியாண்டில் 2,070 மாணவ, மாணவிகளுக்கு ₹50.63 கோடியும், 2024 -25ம் நிதியாண்டில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல், இதுவரை 438 மாணவ, மாணவிகளுக்கு ₹15.89 கோடி என மொத்தம் 5,769 மாணவ, மாணவிகளுக்கு ₹123 கோடியே 66 லட்சம் மதிப்பில் கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் மிகவும் மகிழ்ச்சிடைந்துள்ளனர்.

The post 5,769 பேருக்கு ₹123.66 கோடி கல்விக்கடன் appeared first on Dinakaran.

Related Stories: