கர்நாடகாவில் அக்டோபர் 3ம் தேதி தொடங்கும் தசரா விழா, அக்., 12ம் தேதி வரை நடக்கும்: முதல்வர் சித்தராமையா அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் அக்டோபர் 3ம் தேதி தொடங்கும் தசரா விழா, அக்., 12ம் தேதி வரை நடக்கும் என முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு, மாநிலத்தில் வறட்சி நிலவியதால், வழக்கத்தை விட, கொண்டாட்டம் வெகுவாகக் கொண்டாடப்பட்டது. இருப்பினும், கர்நாடகாவில் இந்த ஆண்டு அதிக அளவு மழை பெய்துள்ளது. இதனால் இந்தாண்டு தசரா விழா மிகவும் விமரிசையாக கொண்டாடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வர் சித்தராமையா தலைமையில், பெங்களூரு விதான் சவுதாவில், நேற்று மாலை உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் இந்தாண்டு தசரா விழா மிகவும் விமரிசையாக கொண்டாடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தில் பேசிய சித்தராமையா; அக்டோபர் 3ம் தேதி காலை 9:15 மணிக்கு, சாமுண்டீஸ்வரி தேவிக்கு மலர் துாவுவதன் மூலம், தசரா விழா துவங்கப்படும். அதே நாளில், தசரா கண்காட்சியும் துவக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசின் சாதனைகள், வாக்குறுதி திட்டங்கள் அடையாளப்படுத்தப்படும். வரும் 21ம் தேதி காலை 10:10 மணிக்கு, ஹுன்சூரின் வீரனஹொசஹள்ளி கிராமத்தில் யானைகளுக்கு பூஜை செய்து, காட்டில் இருந்து, தசரா விழாவுக்காக மைசூருக்கு அனுப்பி வைக்கப்படும். அக்., 3ம் தேதி துவங்கும் தசரா விழா, அக்., 12ம் தேதி வரை நடக்கும். ஒன்பது நாட்களும் பாரம்பரிய முறைப்படி கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

விஜயதசமி நாளான அக்., 12ம் தேதி பகல் 1:41 மணி முதல் 2:10 மணிக்குள் நந்தி கொடிக்கு பூஜை செய்து, ஜம்பு சவாரி ஊர்வலம் துவக்கி வைக்கப்படும். மாலை 4:00 மணிக்கு சாமுண்டீஸ்வரி தேவியை தங்க அம்பாரியில் சுமக்கும் கஜபடைக்கு மலர் துாவி வணங்கப்படும். சுற்றுலா பயணியரை கவரும் வகையில், நகர் முழுதும் மின் விளக்கு அலங்காரம் செய்யப்படும். கடந்தாண்டு ஒரு வாரம் விஸ்தரிக்கப்பட்டது. இம்முறை தசரா முடிந்த பின் 21 நாட்கள் வரை மின் விளக்கு அலங்காரம் விஸ்தரிக்கப்படும். உள்ளூர் கலைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று கூறினார்.

 

The post கர்நாடகாவில் அக்டோபர் 3ம் தேதி தொடங்கும் தசரா விழா, அக்., 12ம் தேதி வரை நடக்கும்: முதல்வர் சித்தராமையா அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: