ஆடி சுவாதியை முன்னிட்டு திருச்செந்தூரில் வெள்ளை யானை வீதியுலா

திருச்செந்தூர்: ஆடி சுவாதியை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வெள்ளை யானை வீதி உலா வந்தது. ஆடி மாதம் சுவாதி நட்சத்திர தினத்தில் 63 நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனாருக்கு திருக்கயிலாய மலையில் சிவபெருமான் ஐராவதம் (வெள்ளை யானை) உருவத்தில் காட்சி கொடுத்தார் என்பது ஐதீகம். இதை நினைவு கூரும் வகையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனையும், தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடந்தன.

மாலையில் கோயில் யானையின் உடல் முழுவதும் மாவு பூசி வெள்ளை நிறத்தில் யானையும், தங்கச்சப்பரத்தில் சுந்திரமூர்த்தி நாயனாரும் கோயிலில் இருந்து புறப்பட்டு சன்னதி தெரு, உள் மாடவீதி மற்றும் ரதவீதிகள் வழியாக உலா வந்து மீண்டும் கோயிலை வந்தடைந்தனர். தொடர்ந்து கோயில் உள்பிரகாரத்தில் 108 மகாதேவர் சன்னதியில் வெள்ளை நிற யானை முன்பாக சேரமாள்பெருமானும், சுந்தரமூர்த்திநாயனாரும் தனித்தனி பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் திரளானோர் கலந்துகொண்டு தரிசித்தனர்.

The post ஆடி சுவாதியை முன்னிட்டு திருச்செந்தூரில் வெள்ளை யானை வீதியுலா appeared first on Dinakaran.

Related Stories: