கொல்கத்தா மருத்துவ மாணவி பலாத்கார கொலை; ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரி முதல்வர் ராஜினாமா: சிபிஐ விசாரணை கோரி டெல்லியில் போராட்டம்

கொல்கத்தா: கொல்கத்தா மருத்துவ மாணவி பலாத்கார கொலை சம்பவத்தில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜினாமா செய்தார். சிபிஐ விசாரணை கோரி டெல்லியில் போராட்டம் நடக்கிறது. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியின் 2ம் ஆண்டு மருத்துவ மாணவி ஒருவர், கல்லூரி வளாகத்தில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். மருத்துவர்கள், மருத்துவ மாணவர்களின் பாதுகாப்பை மேற்குவங்க அரசு உறுதி செய்ய வேண்டும். உடனடியாக நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில், அகில இந்திய மருத்துவ சங்கங்களுடன் இணைந்து இந்திய அளவில் மிகப்பெரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று மருத்துவர் சங்கங்கள் அறிவித்துள்ளன.

இந்நிலையில், ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதல்வர் சந்தீப் கோஷ், இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், ‘முதுகலை பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம், மிகுந்த வேதனை அளிக்கிறது. சமூக வலைதளங்களின் மூலம் என் மீது அவதூறு பரப்புகின்றனர். இறந்த மாணவி, எனது மகளை போன்றவர். பெற்றோர் என்ற முறையில் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன். எதிர்காலத்தில் யாருக்கும் இப்படியொரு சம்பவம் நடக்கக் கூடாது’ என்றார். இதற்கிடையே டெல்லியில் உள்ள டாக்டர் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை வளாகத்தில், கொல்கத்தா சம்பவத்தை கண்டித்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பெண் மருத்துவர் ஒருவர் கூறுகையில், ‘மூன்று விதமான கோரிக்கைகளை முன்வைக்கிறோம். கொல்கத்தா சம்பவத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும். மாநில அரசின் விசாரணை ஒருதலைபட்சமானது என்பதால், அவர்கள் அப்பாவியை பிடித்து விசாரிக்கின்றனர். எங்களை அமைதிப்படுத்த விரும்புகிறார்கள். அவ்வாறு நடக்க விடமாட்டோம். மாணவியை கூட்டு பலாத்காரம் செய்து கொன்றுள்ளனர். இந்த சம்பவம் டெல்லி நிர்பயா சம்பவத்தின் 2வது பகுதியாகும். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர், சம்பவம் நடந்த போது என்ன செய்து கொண்டிருந்தார்? என்று சிலர் கேள்வி கேட்கின்றனர். இரவு நேரபணியில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். நாடு முழுவதும் அனைத்து மருத்துவமனைகளிலும் மருத்துவர்களுக்கான பாதுகாப்புச் சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும்’ என்றார்.

 

The post கொல்கத்தா மருத்துவ மாணவி பலாத்கார கொலை; ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரி முதல்வர் ராஜினாமா: சிபிஐ விசாரணை கோரி டெல்லியில் போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: