தமிழக மீனவர்களை நடுக்கடலில் தாக்கி ரூ.4 லட்சம் பொருட்கள் பறிப்பு: இலங்கை கடற்கொள்ளையர் மீண்டும் அட்டூழியம்

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே நடுக்கடலில் பைபர் படகில் மீன் பிடித்து கொண்டிருந்த 4 மீனவர்களை தாக்கி ரூ.4 லட்சம் மதிப்பிலான உபகரணங்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்து சென்றனர். காயமடைந்த 4 மீனவர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறையில் இருந்து சிவசங்கர் என்பவர் தனக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த ராஜகோபால், தனசேகரன், செல்வ கிருஷ்ணன் ஆகியோருடன் நேற்று மாலை கடலில் மீன் பிடிக்க சென்றார். கோடியக்கரைக்கு தென்கிழக்கே நடுக்கடலில் நேற்றிரவு வலை விரித்து மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு பைபர் படகில் இலங்கையை சேர்ந்த கடற்கொள்ளையர்கள் 4 பேர் வந்து மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்த பைபர் படகை சுற்றி வளைத்தனர்.

பின்னர் கத்தி, கம்பு உள்ளிட்ட ஆயுதங்களுடன் படகில் 4 பேரும் ஏறி மீனவர்களை சரமாரியாக தாக்கினர். பின்னர் மீனவர்கள் படகில் வைத்திருந்த 700 கிலோ வலை, ஜிபிஎஸ் கருவி, செல்போன், டார்ச்லைட் மற்றும் மீனவர்கள் அணிந்திருந்த செயின், மோதிரம் உள்ளிட்ட பொருட்களை பறித்து கொண்டு தப்பி சென்றனர். கடற்கொள்ளையர்கள் பறித்து சென்ற பொருட்களின் மதிப்பு ரூ.4 லட்சமாகும். கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்த 4 மீனவர்களும், நேற்று நள்ளிரவு ஆறுகாட்டுத்துறைக்கு கரை திரும்பி சக மீனவர்கள் மற்றும் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் காயமடைந்த 4 மீனவர்களும் சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post தமிழக மீனவர்களை நடுக்கடலில் தாக்கி ரூ.4 லட்சம் பொருட்கள் பறிப்பு: இலங்கை கடற்கொள்ளையர் மீண்டும் அட்டூழியம் appeared first on Dinakaran.

Related Stories: