போர்க்களத்திலும் கடவுளைத் திட்டாதீர்கள்!

“அறப்போர்” எனும் தலைப்பிலான நபிமொழிகளை வாசித்துக் கொண்டிருந்தேன் (அபூதாவூது மூன்றாம் பாகம்) போர் தர்மங்களை முறையாக வகுத்தளித்துள்ள மார்க்கம்தான் இஸ்லாம். போரின்போது எதைச் செய்யலாம், எதைச் செய்யக்கூடாது என்றெல்லாம் விதிமுறைகள் உள்ளன.அறப்போர் தொடர்பான ஒரு நபிமொழியில் “போர்க்களத்தில் நாவினாலும் போராடுங்கள்” என்று ஒரு சொற்றொடர் உள்ளது. இதற்கு அறிஞர் பெருமக்கள் அளித்துள்ள விளக்கம் எண்ணி எண்ணி இன்புற வைத்தது. “போர்க்களத்தில் நாவினாலும் போராடுங்கள் என்பதற்கு, எதிரியை நிலைகுலைய வைக்கும் வகையில் பேசலாம்; உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவோம் என்று மிரட்டலாம்; சூறையாடுவோம் என்று அச்சுறுத்தலாம். ஆனால், எதிரிகள் வழிபடும் கடவுள்களை ஒருபோதும் திட்டவோ அவமானப்படுத்தும் வகையில் பேசவோ கூடாது, அதை மார்க்கம் அனுமதிக்கவில்லை.”இந்த விளக்கம் சிந்திக்க வைத்தது.

எந்தச் சூழ்நிலையிலும் இதர மதத்தினர் வணங்கும் கடவுள்களைத் திட்டக்கூடாது என்பது திருக்குர்ஆனின் திட்டவட்டமான கட்டளையாகும். “(முஸ்லிம்களே) அவர்கள் ஏக இறைவனை விடுத்து யாரிடம் பிரார்த்தனை புரிகின்றார்களோ அவர்களை நீங்கள் ஏசாதீர்கள்.” (குர்ஆன் 6:108) அநீதிக்கும் அக்கிரமத்துக்கும் எதிராகத்தான் இறை வழியில் போராட வேண்டுமே தவிர வேறு எந்த உலகியல் லாபத்திற்காகவும் இஸ்லாம் போரை அனுமதிக்கவில்லை.“பலவீனமான ஆண்களையும் பெண்களையும் சிறுகுழந்தைகளையும் காப்பதற்காக இறைவனின் பாதையில் நீங்கள் போர் செய்யாதிருக்கக் காரணம் என்ன? (குர்ஆன் 4:75) நீதிக்காக நடத்தப்படும் போராட்டம்தான் போர். ஆகவே அந்தப் போர்க்களத்திலும் கூட எதிரிகள் வழிபடும் தெய்வங்களைத் திட்டக்கூடாது என்பது மிகவும் பொருத்தமான அறிவுரையாகும். போர் என்று வந்துவிட்டால் உடலில் வாளும் ஈட்டியும் பாயும். காயங்கள் ஏற்படும். ஏன் உயிரையே அர்ப்பணிக்கவும் வேண்டி வரலாம். அந்தச் சூழ்நிலையிலும் மற்றவர்களின் மனங்களைப் புண்படுத்தக்கூடாது என்று மார்க்கம் வலியுறுத்துகிறது. போர்க்களத்திலும் மத நல்லிணக்கத்தைப் பேணச் சொல்கிறது இஸ்லாம்.
– சிராஜுல்ஹஸன்

 

The post போர்க்களத்திலும் கடவுளைத் திட்டாதீர்கள்! appeared first on Dinakaran.

Related Stories: