சந்திரனுக்கு ராக்கெட் அனுப்ப முடியும்போது ஒரு விமானம் சொந்தமாக தயாரிக்க முடியாதா? மக்களவையில் தயாநிதி மாறன், எம்.பி ஆவேசம்

புதுடெல்லி: சந்திரனுக்கு ராக்கெட் அனுப்ப முடியும்போது இந்தியாவால் சொந்தமாக ஒரு பயணிகள் விமானம் தயாரிக்க முடியாதா? என்று மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி ஆவேசமாக பேசினார். மக்களவையில் இந்திய விமானச் சட்ட மசோதா 2024 மீது நேற்று நடந்த விவாதத்தில் திமுக நாடாளுமன்றக் குழுத் துணைத்தலைவரும் மத்திய சென்னை எம்பியுமான தயாநிதி மாறன் பேசியதாவது:  1934ம் ஆண்டு முதல் அமலில் உள்ள விமான சட்டத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் திருத்தம் செய்யலாம்.

ஆனால், புதிய மசோதா ஏன் கொண்டு வர வேண்டும். அதன் பெயரை இந்தியிலோ, சமஸ்கிருதத்திலோ ஏன் வைக்கவேண்டும். ஏனென்றால் இந்தி தேசிய மொழி அல்ல. ஓர் இளம் மற்றும் ஆற்றல்மிக்க அமைச்சரான நீங்கள் எப்படியாவது போராடி இந்த சட்டத்திற்கு, தெலுங்கில் பெயர் வைத்திருந்தால் நாங்கள் பாராட்டியிருப்போம். அதே சமயம் அரசியலமைப்பு ரீதியாக, ஆங்கிலத்தில்தான் பெயரிட வேண்டும் என்பதையும் நான் சுட்டிக்காட்டுகிறேன்.

மசோதாவில் உற்பத்திக்கான தரம் நிர்ணயிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் எந்தப் பகுதியில் பயணிகள் விமானம் தயாரிகப்படுகிறது என்பது தெரியவில்லை. பயணிகள் விமானத்தைத் தயாரிக்கும் வசதியோ, திறனோ, இந்தியாவிடம் இல்லை. மாறாக நாம் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் போன்ற இரண்டு பெரிய நாடுகளைச் சார்ந்து இருக்கிறோம். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ராக்கெட்டால் சந்திரனுக்கு விண்கலத்தை அனுப்ப முடியும்போது, நம்மிடம் ஒரு விமானத்தைத் தயாரிக்கும் திறன்கூட இல்லையா? சீனாவினால் சொந்தமாக விமானம் தயாரிக்க முடிகிறது.

விமான நிலையங்களைச் சுற்றி சுவரொட்டிகள், கட்டிடங்கள் மற்றும் மரங்கள் வராமல் பார்த்துக் கொள்ள மட்டுமே இன்றைக்கு விமானப் போக்குவரத்து அமைச்சகத்தால் முடியும். நீங்கள் விமான போக்குவரத்துத்துறையில் இந்தியாவின் மகாராஜாவாக(ஏர் இந்தியா) இருந்தீர்கள், ஆனால் ரூ.68,000 கோடியை அழித்து வெறும் ரூ.16,000 கோடிக்கு விற்றுவிட்டீர்கள். முன்பு ஏர்இந்தியா நிறுவனத்துக்கு பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் மாற்றியமைத்தலுக்கு சலுகைகள் மறுத்த ஒன்றிய அரசு, இப்போது டாடா குழுமத்துக்கு கைமாறியதும் சலுகைகளை வழங்குகிறது.

இதே சலுகைகளை ஏர் இந்தியா நிறுவனமும் பெற்றிருந்தால் அதுவும் லாபகரமாக இயங்கி இருக்கும். பாஜ அரசு விமானக் கட்டணத்தைக் குறைக்கும் என்று நினைத்தோம். ஆனால் வந்தே பாரத் ரயில்கள் மூலம் ரயில்வே கட்டணத்தையே விமானப் கட்டணத்திற்கு நிகராக உயர்த்திவிட்டீர்கள். இன்று நீங்கள் அமெரிக்காவின் எப்.ஏ.ஏ, ஐரோப்பிய விமான போக்குவரத்துத்துறை நிர்ணயித்த வழிமுறைகளை பின்பற்ற இந்த சட்டத்திருத்தத்தை மேற்கொண்டுள்ளீர்கள்.

விமான போக்குவரத்துகளில் நம் இந்திய மக்களுக்கு மட்டும் ஏன் இணைய வசதி வழங்கப்படவில்லை. அந்த வசதியை செய்து தர வேண்டும். ஓசூர் இப்போது ஒரு நல்ல பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் மாற்றியமைத்தல் தளமாக உருவெடுத்து வருகிறது. அந்த வகையில் ஓசூர் ஊக்குவிக்கப்படுவதையும் அனைத்தையும் குஜராத்திற்கு மாற்றாமல் இருப்பதையும் நீங்கள் உறுதி செய்யவும். இவ்வாறு தயாநிதி மாறன் பேசினார். பின்னர் இந்திய விமான சட்ட மசோதா குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

* சென்னை விமான நிலையத்தில் நிலம் வீணடிப்பு
தயாநிதி மாறன் பேசுகையில், ‘‘சென்னை விமான நிலையத்திற்கு அமைச்சர் சென்று, இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) மூலம் எவ்வளவு நிலம் வீணடிக்கப்படுகிறது என்பதைப் பார்க்க வேண்டும். விமான நிலையத்தின் இடது மற்றும் வலதுபுறத்தில், இராணுவத்திற்கு சொந்தமான நிலங்கள் உள்ளன; அங்கு காட்டு மரங்கள் மட்டுமே உள்ளன, மேலும் எரிபொருள் கொள்கலன்கள் அங்கு வைக்கப்படுகின்றன, அவை வேறு இடத்துக்கு நகர்த்தப்படலாம்.

மேலும் வலது பக்கத்தில், தொழிலாளர்களுக்கான குடியிருப்புகள் உள்ளன, அவை அத்தியாவசியமானவைதான். இருப்பினும் எதிர்ப்புறம் சாலையோரத்தில் நிலம் எளிதில் கிடைக்கும் பட்சத்தில் அவற்றை அங்கு மாற்றலாம்; அவ்வாறு செய்யும்பட்சத்தில், நாம் மேலும் 15 ஏரோ பிரிட்ஜ்களை அமைக்கும் வகையில் அதன் திறனை விரிவாக்கம் செய்ய முடியும்’’ என்றார்.

* ஒரு நிறுவனத்தின் ஆதிக்கம் தடுக்கப்பட வேண்டும்
தயாநிதி மாறன் பேசுகையில், ‘‘தமிழக விமான நிலையங்கள் அனைத்தும் புறக்கணிக்கப்படுகின்றன. கோவை விமான நிலையம் சர்வதேச வரைபடத்தில் இடம்பிடிக்க வேண்டும். இன்றுவரை உங்களால் அதைச் செய்ய முடியவில்லை. துரதிர்ஷ்டவசமாக, தூத்துக்குடியில் தனி ஆதிக்கம் உள்ளது, இண்டிகோ என்ற ஒரே ஒரு விமான நிறுவனம் மட்டுமே அங்கு இயங்குகிறது. வேறு எந்த விமானமும் அங்கு செல்லாது, ஒரு ப்ரொப்பல்லர் விமானத்திற்கு விமான கட்டணம் ரூ.25,000 வரை செல்கிறது, இருப்பினும் அது பயணிகள் நிறைந்த விமானமாகத்தான் பயணிக்கிறது.

திருச்சி முதல் சென்னை வரும் விமானங்களிலும் அதேபோல் தனி ஆதிக்கம் நிகழ்ந்து வருகிறது. இந்தத் துறைகளில் இதுபோன்ற தனி ஆதிக்கம் மேலோங்காமல் இருப்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும், ஏனெனில் தனி ஆதிக்கம் தலைதூக்கும்போது, அதன் விலைகள் அதிகரித்து, நுகர்வோர் பாதிக்கப்படுகின்றனர். இப்போதைக்கு கையில் லத்தியை வைத்திருக்கின்ற காவலராக நீங்கள்தான் இருக்கிறீர்கள். பயணிகளின் கட்டணத்தைக் குறைத்து அவர்களுக்கான வசதிகளை அதிகரிக்க அனைத்து விமான நிறுவனங்களுடன் இதுகுறித்து பரிசீலித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

 

The post சந்திரனுக்கு ராக்கெட் அனுப்ப முடியும்போது ஒரு விமானம் சொந்தமாக தயாரிக்க முடியாதா? மக்களவையில் தயாநிதி மாறன், எம்.பி ஆவேசம் appeared first on Dinakaran.

Related Stories: