விருதுநகர், ஆக.8: விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தாய்பால் வார இறுதி விழா நடைபெற்றது. குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவத்தை தாய்மார்களுக்கு உணர்த்தும் விதமாக உலக சுகாதார அமைப்பால் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 முதல் 7ம் தேதி வரை ‘உலக தாய்ப்பால் வாரம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. தாய்ப்பால் முறையாக கொடுக்கப்படாத குழந்தைகள் நோய்வாய்ப்படும் வாய்ப்புகள் அதிகம். தாய்ப்பால் கொடுப்பதன் மூலம், ஒவ்வாமை, காதுகளில் ஏற்படும் தொற்று போன்றவற்றிலிருந்து குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்கிறது. குழந்தைகளின் பற்கள், நாக்கு உட்பட பேச பயன்படும் உறுப்புகள் வேகமாக வளர்ச்சியடைய தாய்ப்பால் தருவது மிக அவசியம். தாய்ப்பால் கொடுப்பதன் மூலம், தாய்க்கு ஏற்படும் கருப்பை புற்றுநோய், மார்பக புற்றுநோய் ஆகியவற்றை தடுக்கலாம். இதனை எடுத்துரைக்கும் வகையில் மக்கள் நல்வாழ்வுத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட பல இடங்களில் தாய்ப்பால் வார விழா நடத்தப்படுகிறது. இதனை முன்னிட்டு, இவ்விழாவை விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல்வர் (பொ) லலிதா ஆகஸ்ட் 1ம் தேதி குழந்தைகள் வெளிநோயாளிகளின் பிரிவில் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இறுதி விழா விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று நடைபெற்றது. டாக்டர் சங்கீத் வரவேற்றார். மருத்துவ கல்லூரி முதல்வர் (பொ) லலிதா தலைமை வகித்தார்.
மருத்துவக் கண்காணிப்பாளர்(பொ) வெங்கட்ராமன், துணை கண்காணிப்பாளர் அன்புவேல், நிலைய மருத்துவர் (பொ) பாண்டிச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், குழந்தைகள் நலத்துறை மருத்துவர் பேராசிரியர் அரவிந்த் பாபு தாய்ப்பாலின் அவசியம் குறித்து எடுத்துரைத்தார். இதில், செவிலியர் பயிற்சிப் பள்ளி மாணவிகளின் விளக்க நாடகம் மற்றும் வில்லுப்பாட்டு ஆகியவை நடைபெற்றன. மேலும் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கு வினாடி வினா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன. முடிவில், டாக்டர் ராதிகா நன்றி கூறினார்.
The post அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு போட்டி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கல் appeared first on Dinakaran.