ஆடுதுறை ஜகத்ரட்சகப் பெருமாள்

எல்லாம் அறிந்த இறைவன் ஒரு விஷயம் மட்டும் தெரியாதவனாக இருக்கிறானே என்று ஆதங்கப்படுகிறார் திருமங்கையாழ்வார். அது என்னவாம்? ‘தாம் தம் பெருமை அறியார்’ என்பதாம். அதாவது தன் பெருமையைத் தானே அறியாதவனாக, மிகவும் எளியவனாகத் திகழும் எம்பெருமானை எண்ணி எண்ணி நெகிழ்கிறார் ஆழ்வார். குறிப்பாக, திருக்கூடலூர் ஆடுதுறைப் பெருமாளை தரிசிக்கும்போது அவருக்கு இந்த எண்ணம் மேலோங்கி வந்திருக்கிறது. பரந்தாமன்தான் எவ்வளவு பெரியவன்! அவன், பாண்டவர்களுக்காக, கொடியவன் துரியோதனனிடம் தூது சென்றானே, அப்போது கௌரவம் பார்த்தானா? ‘உலகையே புரந்தருளும் நான் ஒரு தூதுவனாகப் போவதா?’ என்று சிந்தித்தானா? நப்பின்னையின் காதலுக்கு மரியாதை செய்யும் வகையில், அவளை ஒரு சாதாரண மானுடப் பெண்ணாக அலட்சியப்படுத்தி ஒதுக்காமல், அவளுடைய காதலை ஏற்பதற்காக, ஏழு காளைகளை அடக்கி, வெருட்டி ஓடச் செய்து தன் வீரத்தை நிரூபித்தானே, அப்போதுதான் பரம்பொருள் என்ற செருக்கு கொண்டானா?

வெண்ணெய் திருடி உண்பதற்குக் குழந்தை மனப்பக்குவம்தான் பொருத்தமானது என்று உணர்ந்து பால கிருஷ்ணனாக அவதாரமெடுத்து அப்படி ஒரு விஷமத்தில் ஈடுபட்டவன்தானே அவன்? மகாபலியின் தான ஆணவத்தை அடக்கி விஸ்வரூபம் எடுத்த அவன், முதலில் எளிமையான வாமனனாகப் போனவன்தானே? தட்சனின் வேள்வியைத் தகர்த்தெறிந்த சிவபெருமானின் துக்கத்தைப் போக்கியருளினானே! மென்மைப் பண்பு கொண்டவனானாலும் உலகம் முழுவதையும் உண்டவன்தானே அவன்! தானே உருவாக்கிய பிரளயத்திலும் பாதிக்கப்படாத திருநீர்மலை மீது நின்று அருள் புரிந்து அவர் (திருமங்கையாழ்வார்) உள்ளத்தையும் நெகிழச் செய்தவன்தானே! இப்படி தன் பெருமையை ‘உணராமல்’ பிறர் நலன் நாடி, செயற்கரிய செயல் பல செய்த அண்ணல் இன்முகத்தோனாய் நம் குறையெலாம் தீர்க்க திருக்கூடலூர் என்ற இத்தலத்தில் எழுந்தருளியிருக்கிறான் என்கிறார் ஆழ்வார்.

‘தூது வேந்தர்க் காய வேந்த ரூர்போல்’, ‘செறும்திண் திமிலேறுடைய, பின்னை பெரும்தண் கோலம் பெற்றா ரூர்ப்போல்’, ‘பிள்ளை யுருவாய்த் தயிருண்டு அடியேன் உள்ளம் புகுந்த வொருவ ரூர்போல்’, ‘தக்கன் வேள்வி தகர்த்த துக்கம் துடைத்த துணைவ ரூர்போல்’, ‘கருந்தண் கடலும் மலையு முலகும் அருந்தும் அடிகள் அமரு மூர்போல்’, ‘கலைவாழ் மலைவா ழெந்தை மருவு மூர்போல்’, ‘பெருகு காத லடியேன் உள்ளம் உருகப் புகுந்த வொருவ ரூர்போல்’ என்றெல்லாம் பாடி இத்தலத்தைச் சிறப்பிக்கிறார் அவர். திருக்கூடலூர் என்ற பெயரை இதற்குமுன் கேள்விபட்டிருக்கிறோம். அது, கூடலழகர் அழகு தரிசனம் தரும் கூடலூர், மதுரையில் இருக்கிறது. தஞ்சை மாவட்டம், திருவையாறு&கும்பகோணம் பாதையில் உள்ள இந்த திவ்ய தேசமும் திருக்கூடலூர் ஆனது எப்படி? (வித்தியாசம் கண்டுபிடிப்பதற்காக மதுரையிலுள்ளது தென்திருக்கூடலூர் என்றும், தஞ்சையில் உள்ளது வடதிருக்கூடலூர் என்றும் சொல்லும் வழக்கமுமிருக்கிறது)அரக்கன் இரண்யனை அழிப்பதற்கு பிரம்ம பிரயத்னம் மேற்கொள்ளவேண்டியிருந்தது.

இதற்காக நந்தக முனிவருடன் முப்பத்து முக்கோடி தேவர்களும் இங்கே ஒன்றுகூடி ஆலோசித்ததால், திருக்கூடல் என்று வழங்கப்படுகிறது. இந்தப் பெயர் ஒற்றுமையில் இன்னொரு சரித்திர நயமும் உள்ளது. அது, மதுரையை ஆண்ட ராணி மங்கம்மாள் தொடர்புடையது. மதுரை திருக்கூடல் கோயில், பாண்டிய மன்னர்களின் பெருமைக்குரியதாகப் போற்றப்படுவதுபோல, தஞ்சை திருக்கூடலும், பாண்டிய அரசியின் முயற்சியால் உருவானதுதான். ஒருமுறை காவிரியில் பெருவெள்ளம் உண்டானது. அது காவிரி அன்னையின் பக்திப் பிரவாகமோ என்று சிந்திக்க வைக்கும் வகையில், இந்தத் திருக்கூடல் பெருமாள் கோயிலை அப்படியே முழுமையாக ஆக்கிரமித்து, தனக்குள்ளேயே அமிழ்த்திக்கொண்டது. ஆனால் கோயில் விக்ரகங்கள் மட்டும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

பெருமாளின் திருக்கருணையால், அந்த விக்ரகங்கள் மீனவர் வலைக்குள் சிக்கி, அவர்கள் இனத்தைப் பாதுகாக்கும் அர்ச்சாவதார மூர்த்தங்களாகத் திகழ்ந்தன. நீருக்குள்ளும், நாளாவட்டத்தில் மண்ணுக்குள்ளுமாக புதைந்து போயிற்று இந்தக் கோயில். இப்படி மணல் மேடிட்டு மறைத்த பகுதி, இப்போதும், ‘பெருமாள் பொட்டல்’ என்றழைக்கப்படுகிறது. இப்போதைய கோயிலிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தப் பொட்டல்.மதுரை திருக்கூடலில் கோயில் கொண்டிருக்கும் கூடலழகர், தான் வேறு தோற்றத்தில் ஆடுதுறையிலும் உறைய சித்தம் கொண்டார் போலிருக்கிறது! மீனவர் வலையில் சிக்கிய தானும், தன் பரிவாரங்களும், உலகளாவிய பரிமாணத்தில் காட்சியளிக்க விருப்பம் கொண்டார் போலிருக்கிறது! அதனால்தான் மதுரை அரசி ராணி மங்கம்மாள் கனவில் அவர் தோன்றினார். தன் இருப்பிடத்தை உணர்த்தினார்.

தனக்குக் காவிரிக் கரையில் கோயில் கட்டுமாறு அரசிக்கு ஆணையிட்டார். உடனே செயலில் இறங்கினாள் ராணி. தன் படைத் தளபதியான கிருஷ்ணராஜு நாயக்கருடன் தானே அந்தத் தேடுதலில் நேரிடையாக இறங்கினாள். அரசியார் தேடிவரும் அரும்பொருள் தன்னிடம் இருப்பதை அறிவித்து, தன் பகுதிக்குள்ளேயே அவர் அருள் அடங்கிவிடாதபடி, உலகோர் அனைவரும் அதனைப் பெறும் பெருந்தன்மையுடன், பெருமாள் முதலான விக்ரகங்களை, அரசியிடம் ஒப்படைத்தார், மீனவத் தலைவன். மிகுந்த மகிழ்ச்சியுடன் அவற்றைப் பெற்றுக்கொண்ட ராணி மங்கம்மாள் இச்சிலைகளை எங்கே நிறுவி, கோயில் நிர்மாணிப்பது என்று யோசித்தபோது, ஒரு தெய்வீக ஒளி, தஞ்சை மாவட்டத்தில் ஒரு பகுதியில் வட்டமிட்டு அடையாளம் காட்டியது.

உடனே பணிகள் தொடங்கப்பட்டு அங்கே கோயில் உருவாயிற்று. இந்தக் கோயிலில் அரசியாரின் இந்த சேவையை அங்கீகரிக்கும் வண்ணம் அவரது சிலை வைக்கப்பட்டுள்ளது. திருமால் வராஹ அவதாரம் எடுத்து பூமிக்குள் புகுந்த இடம் இதுதான் என்கிறது புராணம். ‘கூற்றே ருருவின் குறளாய் நிலநீர் ஏற்றா னெந்தை பெருமா னூர்போல்’ என்ற திருமங்கையாழ்வாரின் பாசுர வரிகள் இச்சம்பவத்தை விவரிக்கின்றன. பூமிதேவியைக் கவர்ந்த ஹிரண்யாட்சகன், பாதாள உலகுக்குள் அவளைக் கொண்டு ஒளிக்க, திருமால் வராஹ அவதாரம் எடுத்து முதலில் நிலத்தைக் குடைந்தது இங்குதான். பிறகு அவர் ஸ்ரீ முஷ்ணத்தில் பூமிதேவியுடன் வெளிப்பட்டார் என்றாலும், திருமங்கையாழ்வார் அந்த முயற்சியின் முதல் கட்டம் செயல்படுத்தப்பட்ட இந்தத் தலத்தைதான் பாடியிருக்கிறாரே தவிர, ஸ்ரீ முஷ்ணத்தைப் பாடவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

அதாவது எந்த செயல் வெற்றிக்கும், எடுத்து வைக்கும் முதல் அடிதான் ஆதாரம் என்ற யதார்த்தத்தை உணர்த்தும், அந்த முதல் ‘அடி’யை ‘புகுந்தானூர்’ என்று சொல்லிப் போற்றும் பாசுரம் இது. அனுமன் ராம நாமம் எங்கேனும் ஜபிக்கப்படுகிறதா, அந்த சத்சங்கத்தில் தானும் பங்கு பெறலாமே என்ற ஆதங்கத்துடன் வான்வழியாகப் பறந்து தேடிவந்தபோது, இந்த ஆதனூர் பகுதியில் மக்கள் பேராரவாரம் செய்துகொண்டிருப்பதைக் கண்டு ஆர்வத்துடன் இறங்கினார். பக்தர்கள் தன் நாயகனான ஸ்ரீ ராமனை ஆராதித்து, ஆடிப்பாடி கொண்டாடுவதைக் கண்டு, பெருமகிழ்ச்சியுற்று, தானும் அவர்களுடன் கலந்து ராமனைப் போற்றி வணங்கினான். இச்சம்பவத்தின் சாட்சியாக, பெருமாள் கோயிலிலிருந்து சுமார் 300 அடி தூரத்தில் தனி சந்நதியில் ஆஞ்சநேயர் கோயில் கொண்டிருக்கிறார்.

கூத்தாடும் தோற்றம்! இந்தக் கோயிலில் முகப்பில் சீதா&லட்சுமண சமேதராக ராமர் சிற்ப வடிவில் காட்சி தருகிறார். கோயில் விதானத்தின் நான்கு மூலைகளிலும் மான் சிற்பங்கள் காணப்படுகின்றன. மாரீச மாயமான்களோ! இந்த அனுமன் கோயிலுக்குப் பின்னால் சக்கர தீர்த்தம் அமைந்துள்ளது. ஆடுதுறை பெருமாள், ஜகத் ரட்சகன் அதாவது வையம் காத்த பெருமாள் என்றழைக்கப்படுகிறார். கோயில் கோபுரத்தில் தசாவதார சிற்பங்கள் காணப்படுகின்றன. கோபுரத்தினுள் நுழைந்தால் எதிரே மண்டபத்தில் இடது பக்கத்தில் சக்கரத்தாழ்வார் பெருமையுடன் தரிசனம் தருகிறார். எம்பெருமானிடம் பேரன்பும், பக்தியும் கொண்டிருந்த அம்பரீஷன் என்ற மன்னனுக்கு துர்வாசரால் பெருந்துன்பம் ஏற்பட, அது கண்டு வெகுண்ட பெருமாள் தன் சக்கராயுதத்தை ஏவ, அது துர்வாசரின் ஆணவத்தை அடக்கியது என்றும் அந்த சக்கரத்தாழ்வார்தான் இவர் என்றும் சொல்கிறார்கள்.

வழக்கம்போல இந்த சக்கரத்தாழ்வாருக்குப் பின்னால் யோக நரசிம்மர் அருளாசி வழங்குகிறார். சக்கரத்தாழ்வார், வடக்கு நோக்கி, 16 திருக்கரங்களுடன் திகழ்கிறார். இவரை செவ்வாய்க்கிழமைகளில் 16 நெய் தீபங்கள் ஏற்றி, வெள்ளை நிற வஸ்திரம் சாத்தி வெள்ளை நிற மலர்களால் அர்ச்சித்து தயிர்சாதம் நைவேத்தியம் செய்து வழிபட்டால் கடன் தொல்லைகளிலிருந்து விரைவில் நிவாரணம் பெறலாம்; நஷ்டத்தில் இயங்கும் தொழில் விருத்தியடைந்து லாபம் கொழிக்கும் என்கிறார்கள்.மண்டபத்தில் வலது பக்கத்தில் பூவராகப் பெருமாள் காட்சி தருகிறார். பூமித் தாயாரை மீட்கும் முயற்சியில், இந்தத் தலத்தில் தான் முதல் அடி எடுத்து வைத்த கம்பீரம் அந்த சுதை சிற்பத்தில் வண்ணமயமாக விளங்குகிறது. அவர் மடியில் பூமி தாயார். கருவறை மண்டபத்தில் வலது பக்கம் விஷ்வக்சேனர், ஸ்ரீ தேவி, பூதேவி சமேதராக வரதராஜப் பெருமாள் ஆகியோரும், பிராகாரச் சுற்றில் பிள்ளை லோகாச்சார்யார், ஆளவந்தார், மணவாள மாமுனிகள், ராமானுஜர், திருமங்கையாழ்வார் ஆகியோரும் தனித்தனி சந்நதிகளை அலங்கரிக்கிறார்கள்.

புஷ்பவல்லித் தாயாரையும் மூலவராக தனியே தரிசிக்கலாம். இவருடைய உற்சவர், அருகே வழுத்தூர் என்ற தலத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள். தாயாருக்கு இடது பக்கத்தில் பிரமாண்டமாக வளர்ந்திருக்கும் பலாமரம் ஒன்றைக் காணலாம். இதுவே இக்கோயிலின் தலவிருட்சம். நிறைய காய்கள் காய்த்துத் தொங்குகின்றன. அவற்றினூடே மரத்தின் அகன்ற தண்டுப் பகுதியில் சங்கு வடிவம் ஒன்று காணப்படுகிறது. மஞ்சள் பூசி அந்த சங்கைத் தனியே அடையாளப்படுத்திக் காட்டியிருக்கிறார்கள். பல பக்தர்கள் அந்த சங்குக்கு மலர் தூவி வழிபடுகிறார்கள். பெருமாளின் சாந்நித்தியம் இங்கே நிலவுவதை இயற்கையும் அங்கீகரித்திருக்கும் திருக்காட்சி இது. அருகே தனிச் சந்நதியில் ஆண்டாள். மூலவர் வையங்காத்த பெருமாள் (ஜகத் ரட்சகன்), நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார். இவருக்கு முன்னால் வராஹர்.

உற்சவரும் வையங்காத்த பெருமாளே. இவர் பிரயோக சக்கரத்தைக் கையிலேந்தியிருக்கிறார். தான் காதலித்து மணந்த, நந்தக முனிவரின் மகளான உஷை மீது சில அரசகுலத்தவர்கள் உண்டாக்கிய அவதூறை நம்பி, அவளை விரட்டிவிட்டான் சந்திரகுல மன்னனான விஸ்வஜித். அந்தப் பாவத்தால் செல்வம் அழிந்து, தொழுநோயும் பீடிக்க, மனைவிக்கு செய்த துரோகத்துக்குப் பிராயசித்தம் தேட அவளைத் தேடி போனான். அவன் துயரைக் கண்ட துறவி ஒருவர், ‘நீ திருக்கூடலூர் எம்பெருமானை வணங்கு; உன் மனைவி உன்னைச் சேருவாள்’ என்று ஆறுதல் அளித்தார். அதன்படியே அவன் பெருமாளின் பாதம் பற்ற, விரைவில் தன் நோய் நீங்கியதோடு, மனைவியையும் அடைந்து மகிழ்ந்தான்.

இந்தப் பெருமாளுக்கு கோயில் எழுப்பி தேர் வடிவமைத்துக் கொடுத்ததன் மூலம் தன் நன்றியை வெளிப்படுத்தினான் அவன். அந்தத் தேர் ‘அம்பரீஷன் ரதம்’ என்றே வழங்கப்பட்டு, ராணி மங்கம்மாளால் புனரமைக்கப்பட்டது. இந்தத் தேர் சுமார் 70 வருடங்களுக்கு முன்புவரை வீதிகளில் திருவுலா வந்திருக்கிறது. இப்படி பிரிந்த தம்பதியைச் சேர்த்து வைத்த இந்தப் பெருமாள், இன்றளவும் அந்தப் பேரருளை பக்தர்களுக்கு நல்கி வருகிறார். மன வேற்றுமையால் பிரிந்த தம்பதி இந்தப் பெருமாளுக்கு வெண்ணெயையும், கல்கண்டையும் நிவேதனமாக சமர்ப்பித்து, பிறகு அவற்றை கோயிலுக்கு வரும் குழந்தைகளுக்கு விநியோகித்தால், மன ஒற்றுமை ஏற்பட்டு அவர்கள் மீண்டும் இணைவது, இப்போதும் நடந்துவருகிறது. இந்தப் பரிகாரத்தை இவர்கள் வாரம் ஒருநாள் வீதம் பதினாறு வங்களுக்கு மேற்கொள்கிறார்கள்.

தியான ஸ்லோகம்

ஆடுதுறை ஜகத்ரட்சகப் பெருமாளை தரிசனம்
செய்யும்வரை அவரது தியான ஸ்லோகத்தைச் சொல்லிக்கொண்டிருக்கலாம்.
ஸ்ரீ மத் ஸர்வ ஸுரேட்ய மேலந புரே தேவோ ஜகத்ரக்ஷக:
தீர்த்தம் சக்ரஸரோ, விமாநமபி வைதத் சுத்த ஸத்வாஹ்வயம்
தஸ்மிந் நந்த கதா பஸாய வரதோ, தேவீது பத்மாஸநா
ப்ரோத்யத் பாஸ்கர திங்முக: ஸுரகணைஸ் ஸம்ஸெவிதோ த்ருச்யதே
ஸ்ரீ விஷ்ணு ஸ்தல தர்சனம்
பொதுப் பொருள்:

மேலனபுரம் என்றழைக்கப்படும் திருக்கூடலூர் எனும் இத்திவ்ய தேசத்தில் ஜகத்ரட்சகப்பெருமாள் என்ற திருப்பெயரில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானே நமஸ்காரம். சுத்த ஸத்வ விமான நிழலில், சக்ர தீர்த்தக் கரையில், பத்மாஸன வல்லித் தாயாருடன், கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம் கொண்டு, நந்தக மாமுனிவரின் தவத்திற்கு இரங்கிக் காட்சியருளிய பெருமாளே நமஸ்காரம். தேவர்கள் அனைவராலும் வணங்கப்படுகின்ற பரம்பொருளே நமஸ்காரம்.

எப்படிப் போவது?

கும்பகோணம், பாபநாசம் பாதையில் திருவையாறு செல்லும் வழியில் உள்ளது ஆடுதுறை பெருமாள் கோயில். கும்பகோணத்திலிருந்தும், பாபநாசத்திலிருந்தும் பேருந்து, ஆட்டோ, வாடகைக் கார் வசதிகள் உண்டு.

எங்கே தங்குவது?

கும்பகோணம் அல்லது பாபநாசத்தில் தங்கிக்கொள்ளலாம். அவரவர் தேவைக்கேற்ப தங்கும் விடுதிகள் உள்ளன. உணவு வழங்கவும் உணவு விடுதிகள் உண்டு.

கோயில் திறந்திருக்கும் நேரம்?

காலை 7 முதல் 11 மணி வரையிலும், மாலை 4 முதல் 7 மணிவரையிலும்.

முகவரி:

அருள்மிகு வையங்காத்த பெருமாள் (ஜகத்ரட்சகன்) திருக்கோயில், ஆடுதுறை பெருமாள் கோயில் (சங்கமபுரி), உள்ளிக்கடை அஞ்சல், பாபநாசம் வட்டம், வழி கணபதி அக்ரஹாரம், தஞ்சை மாவட்டம் – 614 202.

The post ஆடுதுறை ஜகத்ரட்சகப் பெருமாள் appeared first on Dinakaran.

Related Stories: