ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று தேரோட்டம் பக்தர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் தயார்

விருதுநகர், ஆக.7: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேர்த்திருவிழா இன்று நடைபெறுவதை முன்னிட்டு முன்னேற்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் எஸ்.பி.பெரோஸ்கான் அப்துல்லா முன்னிலையில் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. ஆடிப்பூரத் தேர்த்திருவிழாவை சிறப்பான முறையில் நடத்திட ஒவ்வொரு துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்தும் துறை வாரியாக விரிவான ஆலோசனை நடைபெற்றது.

கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து பங்கேற்பார்கள். தேரோட்ட வழிபாட்டு நெறிமுறைகளை தொடர்புடைய அலுவலர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். தேரோட்டத்தில் பங்கேற்கும் பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் போதிய பாதுகாப்பு ஏற்பாட்டுப்பணிகளை காவல்துறையினர் மேற்கொள்ளவும், மேலும், போக்குவரத்தினை ஒழுங்குபடுத்தும் பணியிலும் காவல்துறையினர் கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குற்றங்களை தடுக்க ஆங்காங்கே கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் சிரமம் இல்லாமல் தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வருகின்ற பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்குத் தேவையான குடிநீர் வசதி மற்றும் சுகாதார வசதிகள் செய்யப்பட்டுள்ளது. நகராட்சி மூலம் தற்காலிகமாக கழிப்பறை, நடமாடும் கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பான குடிநீர், சுகாதாரமான உணவு வழங்குவதற்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும். அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட பணிகளை சிறப்புடன் மேற்கொள்ள வேண்டும் என்றார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், மற்றும் அனைத்து துறை உயர் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று தேரோட்டம் பக்தர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் தயார் appeared first on Dinakaran.

Related Stories: