நாமக்கல், ஆக.6: நாமக்கல் மாவட்டத்தில் மாட்டம்மை நோய் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு கலெக்டர் உமா அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாடுகளில் ஏற்படும் தொற்றுநோய் மாட்டம்மை நோய் என்பதாகும். இது மாடுகளின் தோல் மீது கொப்புளம், கட்டி போன்று முதலில் தோன்றும். இது கொசுக்கள் மூலம் பரவும். பாதிக்கப்பட்ட கால்நடைகளில் இருந்து ஈக்கள் மற்றும் கொசுக்கள் மூலம், மற்ற கால்நடைகளுக்கும் தொற்றிக்கொள்ளும்.
இந்த நோய் தாக்கம் உள்ள கால்நடைகளில், தீவனம் எடுக்கும் அளவு குறையும். கறவை மாடுகளில் பால் உற்பத்தியின் அளவு குறையும். தடுப்பூசி போடுவதன் மூலம், கால்நடைகளை இந்நோய் தாக்கத்திலிருந்து காத்துக்கொள்ளலாம். நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து கால்நடை மருந்தகங்களிலும், மாட்டம்மை நோய் தடுப்பூசி போடப்படவுள்ளது. எனவே, கால்நடைகளை அருகிலுள்ள மருந்தகங்களுக்கு அழைத்துச்சென்று தடுப்பூசி போட்டுக்கொண்டு மாட்டம்மை நோய் பாதிப்பில் இருந்து காத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
The post மாட்டம்மை நோய் பாதிப்புக்கு தடுப்பூசி appeared first on Dinakaran.