குறை தீர்ப்பான் குறுக்குத்துறை குமரன்

திருநெல்வேலியின் சிறப்புக்களில் ஒன்று – குறுக்குத்துறை சுப்ரமண்யர் கோயில். குன்றில் மட்டுமல்ல, குகையிலும் இடம் கொண்டு அருள்பாலிப்பவனாக இந்தப் பகுதியில் திகழ்கிறான்
முருகவேள்.

பொதுவாகவே இந்தப் பகுதியில் காணப்பட்ட கற்பாறைகள் இறை திருவுருவங்கள் செதுக்கப்படவென்றே உருவானதோ என்று வியக்க வைக்கும் அளவுக்கு இறைத்தன்மை கொண்டிருந்தன. அதனால் இங்கிருந்து சிற்பங்கள் வடிக்கப்பட்டு பல்வேறு கோயில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டன. முக்கியமாக திருச்செந்தூர் முருகன், இந்தப் பாறை தந்த சிற்பம்தான். இந்தப் பகுதிக்கு இதனாலேயே திருவுருமாமலை என்று பெயர்!இப்படி பிற கோயில்களுக்காகப் பாறைகளை இயற்கை கொடுத்திருக்கும்போது, இந்தப் பகுதியிலேயே ஒரு கோயில் நிறுவி அதனுள் சுப்ரமணியரை நிறுவினால் என்ன என்று ஒரு சிற்பிக்குத் தோன்றியது. இந்த எண்ணம்கூட அவர் திருச்செந்தூர் முருகன் சிலையை உருவாக்கியபின் ஏற்பட்டதுதான். ஆனால் வள்ளி, தேவசேனா சமேத முருகனை வடித்த அந்த ஸ்தபதியால் அதை முழுச் சிலையாக வெளிக் கொண்டுவர இயலவில்லை. அதனால் அப்படியே பாறையோடு பாறையாக, புடைப்புச் சிற்பமாக அமைத்து ஆறுதல் அடைந்தார்.

பலநூறு ஆண்டுகளுக்கு முன்னால் இந்த வழியாக வந்த மூதாட்டிக்கு ஏதோ ஆர்வம் உந்த, குகைக்குள் எட்டிப் பார்த்தாள். ‘வா, உனக்காகத்தான் காத்திருக்கிறேன்,’ என்று சொல்வதுபோல மனைவியருடன் முருகன் அவளை வரவேற்க, மூதாட்டி அந்த தரிசனத்தில் மகிழ்ந்தாள். உடனே ஊரார் எல்லோருக்கும் விவரம் சொல்ல, அப்போதுதான் அங்கே ஒரு குகைக் கோயில் இருக்கும் விவரம் எல்லோருக்கும் தெரியவந்தது. அப்புறம் என்ன, குறுக்குத்துறை தாமிர பரணி நதிக்கு வந்தவர்கள் எல்லோரும், நீராடி விட்டு சுப்ரமண்யரையும் தரிசித்தார்கள், தம் கோரிக்கைகள் அடுத்தடுத்து நிறைவேற, தொடர்ந்து வழிபாட்டை மேற்கொண்டார்கள் – கோயிலுக்குத் தனி மகிமை உண்டாயிற்று. தாமிரபரணி ஆற்றின் வடகரையில் கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது கோயில். மூன்றுநிலை ராஜகோபுரம் வழியாக உள்ளே செல்லலாம். மணி மண்டபம், கொடிமரம், பலிபீடம், மயில் வாகனம் எல்லாம் கடந்து மூலவரைத் தரிசிக்க வரலாம். தெற்கே விநாயகர், வடக்கே முருகன். இவர்களின் அருள் பெற்று மேலும் சென்றால், மகா மண்டபம், அர்த்த மண்டபம்.

அடுத்து குடைவரைக் கருவறை. துவார பாலகர்கள் அனுமதியுடன் உள்ளே செல்லலாம். புடைப்புச் சிற்பமாக ஒளிரும் வள்ளி-தேவசேனா சமேத சுப்பிரமணியர் தரிசனம் திவ்யமாக மனதில் ஒளி பாய்ச்சுகிறது. அனைத்துவித பிரார்த்தனைகளையும் நிறைவேற்றித் தரும் வல்லமை படைத்தவராக வழிபடப்படுகிறார் இந்த சுப்ரமண்யர். இதனாலேயே திருச்செந்தூர் முருகனுக்கு வேண்டுதல் சமர்ப்பித்தவர்கள், இந்த குறுக்குத்துறை முருகனை ஆராதித்து தம் விருப்பம் ஈடேறப் பெறுகிறார்கள். கருவறைக்கு முன்புற மண்டபத்தில் வடக்கே நெல்லையப்பர், காந்திமதி அம்மை, நடராசர், விநாயகர் ஆகியோரும் அருள் பெருக்குகிறார்கள். மகா மண்டபத்தில் தெற்கு நோக்கிய சந்நதியில் உற்சவராக வள்ளி-முருகன்-தெய்வானை. கருவறை பாறையைச் சுற்றிலும் பிராகாரத்தில் தட்சிணாமூர்த்தி, கன்னி விநாயகர், சுப்ரமணியர், சனீஸ்வரர், பஞ்ச லிங்கங்கள், சண்டிகேஸ்வரர், பைரவர் ஆகியோரையும் தரிசிக்கலாம். கோயில் தாமிரபரணி ஆற்றின் நடுவே நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. எத்தகைய வெள்ளத்தாலும் இந்தக் கோயில், இதுவரை எந்த சேதமும் அடைந்ததில்லை. கோயிலை ஒட்டி, தூண்கள் தாங்கி நிற்கும் மண்டபங்கள் நிறுவப்பட்டிருந்தாலும், அவையும் பாதிக்கப் படவில்லை.

இதற்கு முக்கிய காரணம், கோயிலின் மேற்குப் பகுதியிலுள்ள மதில் சுவர் ஒரு படகின் முனைபோல கட்டப்பட்டிருப்பதால்தான். வெள்ளம் சீறிப்பாய்ந்து வந்தாலும், இந்தக் கூர் முனையில் இரண்டாகப் பிளவுபட்டு கோயிலின் வடக்கு, தெற்கு பகுதிகளில் பாய்ந்தோடி விடுகிறது!திருச்செந்தூர் முருகப்பெருமானுக்கு நடைபெறுவது போலவே, குறுக்குத் துறையிலும் இரண்டு திருவிழாக்கள். அங்கே ஆவணி மற்றும் மாசியில்; இங்கே சித்திரை மற்றும் ஆவணியில். இவ்வாறான ஆவணி விழாவின்போது, குறுக்குத்துறை சுப்ரமண்யர் சிவப்பு சாத்தி கோலம் பூண்டு, தங்கச் சப்பரத்தில் நெல்லை மாநகருக்கு எழுந்தருளுவார். அங்கே அவருக்கு வைரக் கிரீடமும், வேலும் சாத்தப்படும். பிறகு நெல்லையப்பரின் தேர்வீதிகளில் இவர் உலா வந்து, மறுநாள் காலை வெள்ளை சாத்தியாகி, வெள்ளிச் சப்பரத்தில் உலா ஆரம்பித்து, மாலைநேரத்தில் பச்சை சாத்தியாகி, பச்சைக் கடைசல் சப்பரத்தில் எழுந்தருளி, குறுக்குத்துறைக்கு வந்து சேருவார். கோயில், தரிசனம், விழா, கொண்டாட்டம், கோலாகலம் எல்லாம் இருக்கட்டும், ஆனால் தாமிரபரணி எப்படி இருக்கிறது? நதி என்ற பெருமை, அதற்கு வெள்ள காலத்தில் மட்டும்தான் கிட்டும் போலிருக்கிறது. இப்போது ஓடி, இல்லையில்லை, நகர்ந்துகொண்டிருக்கிறது! ஒரு காலத்தில் கரைபுரண்டு ஓடிய இந்தப் புனிதநதி, இப்போது கறைபுரண்டு ஓடிக் கொண்டிருக்கிறது.

ஸ்ரீ ரங்கம்போல காவிரியை அரங்கன் தன் கோயிலால் இரண்டாகப் பிரித்து காவிரி – கொள்ளிடம் என்று அதன் புனிதத்தை இரட்டிப்பாக்கியிருக்கிறான். ஆனால் குறுக்குத்துறை சுப்ரமண்யரை அவ்வாறு செய்யவிடாமல் மனித சுயநலம் தாமிரபரணியை அவமானப்படுத்திக் கொண்டிருக்கிறது. பெருமழை நாட்கள் தவிர பிற நாட்களில் குறுக்குத்துறை கோயிலின் இடதுபக்கம் முற்றிலும் வறண்டிருக்கிறது. ஊர்மக்கள் கோயிலுக்கு வருவதற்காக இந்தப் பகுதியில் கட்டப்பட்டிருக்கும் பாலம் இன்றளவும் எந்த சேதமும் இல்லாமல் உறுதியாக இருக்கிறது என்று பெருமை கொண்டாலும், அதனடியில் நதி நீரே ஓடாமல், இந்த பாலமும் பரிதாபமாக நிற்கிறது. கோயிலின் வலது பக்கத்திலோ நானும் இருக்கிறேன் என்று சொல்லிக்கொள்வது போல ஓர் ஓடையாக தாமிரபரணி அழுது கொண்டிருக்கிறது. இதிலேயே பக்தர்கள் நீராடுவதும், பிறர் துணி தோய்த்துக்கொண்டிருப்பதும் காண சகிக்காததாக இருக்கிறது. ஆமாம், அனைத்துவகை நகரக் கழிவுகளும் இந்த நதியில் சங்கமமாகிக் கொண்டிருக்கின்றன!

ஒரு மகாப் பெரிய ஆலமர அடர்த்தியாய் புரண்டுவந்த தெய்வீக நதி, வறட்சியால் மெலிந்து ஒரு கொடிபோல சுருங்கிவிட்டதைக் காண கண்களிலிருந்து வேதனை வெள்ளம் பெருகுகிறது. இந்தப் புனித நதியிலிருந்துதான் மதுரகவியாழ்வார் நீரெடுத்து, தன் குரு நம்மாழ்வாரை உளமார நினைத்து, பக்தியுடன் காய்ச்சியபோது அந்த நீர் அப்படியே நம்மாழ்வார் சிலையாக உருக்கொண்டது. இத்தனை பாரம்பரியம் மிக்க தெய்வீக நதி, பொலிவிழந்து போனதற்கு நாம்தானே காரணம் என்ற குற்ற உணர்ச்சியால், குறுக்குத்துறை சுப்ரமண்யரை உளமார வேண்டிக் கொள்ளவும் தயக்கமாகவே இருக்கிறது! நெல்லை ஜங்ஷனிலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது குறுக்குத்துறை சுப்ரமண்யர் கோயில். பேருந்து வசதி இல்லை என்பதால் ஆட்டோ, அல்லது வேறு வாகனம் எதையாவது அமர்த்திக் கொண்டுதான் போய்வர வேண்டும்.

பிரபு சங்கர்

The post குறை தீர்ப்பான் குறுக்குத்துறை குமரன் appeared first on Dinakaran.

Related Stories: