பொள்ளாச்சி, உடுமலை, பழனி வழியாக கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும்

 

உடுமலை, ஆக.5: பொள்ளாச்சி, உடுமலை, பழனி வழியாக கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என மக்களவையில் ஈஸ்வரசாமி எம்பி பேசினார். மக்களவையில் ரயில்வே அமைச்சகத்தின் மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் மீது பொள்ளாச்சி தொகுதி திமுக எம்பி ஈஸ்வரசாமி பேசியதாவது:ஈரோடு- பழனி புதிய ரயில்பாதை திட்டத்துக்கு கணிசமான அளவு நிதி ஒதுக்க வேண்டும். கோவையில் இருந்து பொள்ளாச்சி, உடுமலை வழியாக திருநெல்வேல், கன்னியாகுமரிக்கு புதிய விரைவு ரயில் அறிமுகப்படுத்த வேண்டும்.

மேட்டுப்பாளையம்- தூத்துக்குடி வாரமிருமுறை ரயில், மேட்டுப்பாளையம்- திருநெல்வேலி வாரமிருமுறை ரயில்களை தினசரி ரயிலாக மாற்ற வேண்டும். கோவையில் இருந்து பொள்ளாச்சி- பழனி- திருச்சி- தாம்பரம் வழியாக சென்னைக்கு தினசரி ரயில் விட வேண்டும்.
சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலை பொள்ளாச்சி வரை நீட்டிக்க வேண்டும். உடுமலை- கொழுமம் சாலை, மடத்துக்குளம்- குமரலிங்கம் சாலை ஆகிய இடங்களில் ரயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும்.

பாலக்காடு கோட்டத்தில் உள்ள பொள்ளாச்சி ரயில் நிலையத்தை, சேலம் அல்லது மதுரை கோட்டத்தில் இணைக்க வேண்டும். மடத்துக்குளம் ரயில்நிலையத்தில் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். ரயில் டிக்கெட் கவுண்டர்களில் தமிழ் தெரிந்த ஊழியர்களை நியமிக்க வேண்டும். வந்தேபாரத் ரயில் கட்டணங்களை குறைக்க வேண்டும். பொள்ளாச்சி- வடுகபாளையம் இடையே மூடப்பட்ட ரயில்வே கேட்டை மீண்டும் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

The post பொள்ளாச்சி, உடுமலை, பழனி வழியாக கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: