முன்பதிவு செய்தும் அலைக்கழிப்பு ஆன்லைன் நிறுவனத்திற்கு ரூ.16.40 லட்சம் அபராதம்

தூத்துக்குடி: கோவில்பட்டியைச் சேர்ந்த கவுதம், ஆன்லைன் மூலமாக அரியானாவிலுள்ள ஒரு நிறுவனத்திடம் சென்னையில் தங்குவதற்கு அறை ஒன்றை முன்பதிவு செய்துள்ளார். அதன்படி சென்னையில் உள்ள அந்த ஓட்டலுக்குச் சென்று தங்குவதற்கு அறை கேட்டதற்கு முன்பதிவு குறித்த தகவல் எதுவும் வரவில்லை எனக் கூறினர். இதையடுத்து கவுதம் அந்நிறுவனத்திடம் தொடர்பு கொண்டு கேட்டதற்கு மற்றொரு புதிய ஓட்டலுக்கு செல்லுமாறு கூறினர். அங்கு சென்று அறை கேட்டதற்கு அவர்களும் தங்களுக்கு தகவல் வரவில்லை என்றனர்.

மீண்டும் அந்த நிறுவனம் வேறொரு புதிய ஓட்டலுக்கு செல்லும்படி கூறினர். அந்த ஓட்டல்காரர் மேலும் 600 ரூபாய் அதிகமாக செலுத்தும்படி கூறியதால் மனுதாரர் அதை செலுத்தி தங்கியுள்ளார். இவ்வாறு காலதாமதம் ஆனதால் சட்டக்கல்லூரி நுழைவுத் தேர்வை எழுதிய அவரது தங்கை தேர்வாகவில்லை. பின்னர் மீண்டும் நுழைவுத்தேர்வை எழுதி தேர்வாகி தற்பொழுது சட்டம் பயின்று வருகின்றார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கவுதம், வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதற்கு உரிய பதில் கிடைக்காததால் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் திருநீல பிரசாத் மற்றும் உறுப்பினர்கள் ஆன்லைனில் செலுத்திய ரூ.6,797, மீண்டும் தேர்வு எழுத ஆன செலவுத் தொகை ரூ.1,23,000, ஒழுங்குமுறையற்ற வர்த்தக நடவடிக்கைக்காக ரூ.10 லட்சம் மற்றும் சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக ரூ.5 லட்சம், வழக்கு செலவுக்கு ரூ.10 ஆயிரம் என 16 லட்சத்து 39 ஆயிரத்து 797 ரூபாயை இரு மாதத்திற்குள் வழங்க ஆன்லைன் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளனர்.

The post முன்பதிவு செய்தும் அலைக்கழிப்பு ஆன்லைன் நிறுவனத்திற்கு ரூ.16.40 லட்சம் அபராதம் appeared first on Dinakaran.

Related Stories: