கலைஞரின் 6ம் ஆண்டு நினைவு நாள் சென்னையில் மாற்று திறனாளிகள் 7ம் தேதி அமைதி பேரணி: மாநிலத் தலைவர் அறிவிப்பு

சென்னை: கலைஞரின் நினைவு தினத்தையொட்டி வரும் 7ம் தேதி அமைதிப் பேரணி நடைபெறும் என்று தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் முன்னேற்றச் சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் முன்னேற்றச் சங்க மாநில தலைவர் ரெ.தங்கம் நேற்று வெளியிட்ட அறிக்கை: கலைஞரின் பொற்கால ஆட்சியில் ஊனமுற்றோர் என்ற சொல்லை நீக்கியும், மாற்றுத் திறனாளிகள் என பெயர் சூட்டி மகிழ்ந்ததுடன், அவர்களுக்கு தனி நலவாரியம், தனித் துறையினை அமைத்து, அத்துறையினை தனது நேரடி கட்டுப்பாட்டில் தனி அமைச்சகம் கொண்டு வந்தார்.

அத்துடன் வேலைவாய்ப்பில் 4 சதவீத இட ஒதுக்கீடு, உதவித்தொகை உயர்த்தி வழங்குதல், வீட்டு வசதி வாரியம், நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடு ஒதுக்கீடு, சமத்துவபுரத்தில் இடஒதுக்கீடு, கல்வி உதவித்தொகை இரண்டு மடங்கு உயர்த்தி வழங்குதல், அரசு துறைகளில் பணிபுரிவோர்களுக்கு டிசம்பர் 3ம் தேதி உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு, மாநிலம் முழுவதும் தனது துணையாருடன் அரசு பேருந்துகளில் சென்று வர கட்டணச் சலுகை உள்ளிட்ட பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களை கொண்டுவந்து நிறைவேற்றினார்.

கலைஞருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவருடைய பெயரில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொடர்ந்து தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் முன்னேற்றச் சங்கம் நடத்திவருகிறோம். இந்த நிலையில் அவரது 6ம் ஆண்டு நினைவு நாளான ஆகஸ்டு 7ம் தேதி காலை 8.30 மணிக்கு சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் அரசினர் தோட்டம் வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் சிலை அருகில் இருந்து, ஏராளமான மாற்றுத் திறனாளிகள் தங்களது இணைப்பு சக்கர (ஸ்கூட்டி) வாகனத்தில் பங்கேற்கும் அமைதி பேரணி நடைபெறுகிறது. இந்த பேரணி காமராஜர் சாலையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் முடிவுபெறும். பின்னர் அவர்கள் கலைஞர் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்த உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post கலைஞரின் 6ம் ஆண்டு நினைவு நாள் சென்னையில் மாற்று திறனாளிகள் 7ம் தேதி அமைதி பேரணி: மாநிலத் தலைவர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: