பெண் அதிகாரியை மிரட்டிய விவகாரம்; மே.வங்க சிறைத்துறை அமைச்சர் அகில் கிரி ராஜினாமா

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் பெண் அதிகாரியை மிரட்டிய அமைச்சர் அகில் கிரி பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேற்குவங்கம் பர்பா மித்னாபூர் மாவட்டத்தில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைகளில் மாநில வனத்துறை பெண் அதிகாரி மணிஷா சாகு ஈடுபட்டிருந்தார். இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த திரிணாமுல் காங்கிரஸ் ராம்நகர் பேரவை உறுப்பினரும், சிறைத்துறை அமைச்சருமான அகில் கிரி ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக பேசியதாக கூறப்படுகிறது.

அப்போது வனத்துறை அதிகாரி மணிஷா சாகுவுக்கும், அமைச்சருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டபோது, பெண் அதிகாரியை மிரட்டும் தொனியில் அமைச்சர் அகில் கிரி பேசியுள்ளார். இதுதொடர்பான காணொலி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை எழுப்பியது. இதையடுத்து வனத்துறை பெண் அதிகாரியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அகில் கிரிக்கு கட்சி தலைமை அறிவுறுத்தியது. இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அகில் கிரி, “அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன். ஆனால் யாரிடமும் மன்னிப்பு கேட்க மாட்டேன்” என்று தெரிவித்தார். அதன்படி நேற்று இரவு மின்னஞ்சலில் ராஜினாமா கடிதத்தை அகில் கிரி அனுப்பி வைத்தார்.

The post பெண் அதிகாரியை மிரட்டிய விவகாரம்; மே.வங்க சிறைத்துறை அமைச்சர் அகில் கிரி ராஜினாமா appeared first on Dinakaran.

Related Stories: