நிலச்சரிவு பலி 370ஐ தாண்டியது; வயநாட்டில் இன்று ட்ரோன் சர்வே மூலம் ஆய்வு: இன்றும் மீட்பு பணிகள் தீவிரம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 370ஐ தாண்டி இருக்கிறது. இதற்கிடையே மீட்புப் பணி இறுதிக் கட்டத்தை எட்டி உள்ள நிலையில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இன்று முதல் ட்ரோன் சர்வே நடத்தப்படுகிறது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட சூரல்மலை, முண்டக்கை ஆகிய பகுதிகளில் இருந்தும், பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் இருந்து 35 கிமீக்கு மேல் தொலைவில் உள்ள சாலியார் ஆற்றில் இருந்தும் உடல்கள் கிடைத்த வண்ணம் உள்ளன. தேசிய பேரிடர் மீட்புப் படை, கேரளா மற்றும் ராணுவ மோப்பநாய் பிரிவு, சிறப்பு மீட்புப் படையினர், ராணுவத்தின் மெட்ராஸ் இன்ஜினியரிங் பிரிவு, கேரளா போலீஸ், தீயணைப்புத் துறை, வனத்துறை, தமிழ்நாட்டைச் சேர்ந்த தீயணைப்புத் துறை, மருத்துவக் குழு, இந்திய கடற்படை, கடலோரக் காவல் படை என்று 12 குழுக்களைச் சேர்ந்த 1264 பேர் 6 பிரிவுகளாக மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நிலச்சரிவில் காணாமல் போனவர்கள், அந்த பகுதியில் இருந்த வீடுகளை கண்டுபிடிப்பதற்காக இன்று முதல் ட்ரோன் சர்வே நடத்தப்படுகிறது. இந்தப் பகுதிகளின் பழைய கால புகைப்படங்களை ஒப்பிட்டு பார்த்து இந்த சர்வே நடத்தப்படுகிறது. இந்த பயங்கர நிலச்சரிவில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 370ஐ தாண்டிவிட்டது. 200க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்பதால் அவர்களைத் தேடும் பணி இன்றும் நடைபெற்று வருகிறது.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி முழுவதும் 2 அடிக்கு மேல் சேரும் சகதியுமாக நிறைந்து காணப்படுகிறது. தொடர்ந்து நவீன உபகரணங்களை பயன்படுத்தி சகதிக்குள் ஏதாவது உடல்கள் இருக்கிறதா? என்பது பரிசோதிக்கப்பட்டு வருகிறது. நிலச்சரிவு பாதித்த சூரல்மலை, முண்டக்கை, புஞ்சிரிமட்டம் ஆகிய பகுதிகளில் 31 ஜேசிபி எந்திரங்கள் மூலம் மண், பாறைகளை அகற்றி பரிசோதிக்கப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க இன்று மீட்பு பணியின் போது அந்த பகுதிகளில் உடல்கள் எதுவும் கிடைக்காவிட்டால் நாளையுடன் மீட்புப் பணிகளை நிறுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

 

The post நிலச்சரிவு பலி 370ஐ தாண்டியது; வயநாட்டில் இன்று ட்ரோன் சர்வே மூலம் ஆய்வு: இன்றும் மீட்பு பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: