இதேபோல் நாகை, கரூர், புதுக்கோட்ைட, பெரம்பலூர், அரியலூர், காரைக்கால் மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளில் பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். வேதாரண்யம், பூம்புகார் கடலிலும் நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். ஆடி அமாவாசையையொட்டி திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில், ரங்கம் ரங்கநாதர் கோயில், மலைக்கோட்டை தாயுமானவர் கோயில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில், வெக்காளியம்மன் கோயில் மற்றும் தஞ்சை பெரிய கோயில், புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில், திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயில் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் உள்ள அனைத்து கோயில்களிலும் இன்று அதிகாலை முதலே பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
ராமேஸ்வரம், ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடலில் இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். பின் கோயிலிலுள்ள 22 புண்ணிய தீர்த்தங்களிலும் தீர்த்தமாடி சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் 22 தீர்த்தங்களிலும் நீண்டவரிசையில் காத்திருந்து தீர்த்தமாடினர். ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமநாத சுவாமி திருக்கோயில் இன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு அதிகாலை 5 மணி முதல் 5.30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெற்றது. வழக்கமான கால பூஜைகளை தொடர்ந்து காலை 9 மணிக்கு பர்வதவர்த்தினி அம்பாள் தங்க பல்லக்கில் எழுந்தருளி வீதியுலா வந்தார். காலை 11 மணிக்கு ஸ்ரீ ராமர் தங்க கருட வாகனத்தில் அக்னி தீர்த்த கடற்கரை தீர்த்தவாரிக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு 8 மணிக்கு வெள்ளி தேரோட்டம் நடைபெறுகிறது. ஆடி அமாவாசையையொட்டி இன்று பகல் முழுவதும் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
கன்னியாகுமரி, ஆடி அமாவாசையையொட்டி முன்னோருக்கு பலி தர்ப்பணம் செய்ய இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கன்னியாகுமரியில் குவிந்தனர். திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடலில் புனித நீராடி கடற்கரையில் அமர்ந்து இருந்த புரோகிதர்களிடம் தங்கள் முன்னோர்களை நினைத்து பலி கர்ம பூஜைகள் செய்தனர். பின்னர் பூஜை செய்த பச்சரிசி, எள்ளு, பூக்கள், தர்ப்பை புல் ஆகியவற்றை வாழை இலையில் வைத்து தலையில் சுமந்து சென்று கடலில் போட்டுவிட்டு நீராடினர். அதைத்தொடர்ந்து கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோயில், பகவதி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தனர். ஆடி அமாவாசையையொட்டி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் இன்று அதிகாலை சுமார் 3.30 மணிக்கு மூலஸ்தான நடை மட்டும் திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், நிர்மால்ய பூஜை, அம்மனுக்கு பல வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம், பூஜைகள் நடந்தன. 4.30 மணிக்கு வடக்கு பிரதான வாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். குழித்துறை தாமிரபரணி ஆற்றங்கரையோரம் நேற்று கேரளாவை சேர்ந்த ஏராளமானோர் திரண்டு தங்களது முன்னோருக்கு பலி தர்ப்பணம் செய்தனர். இன்று 2வது நாளாகவும் தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
சதுரகிரி, விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இந்த கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று ஆடி அமாவாசை திருவிழா. இன்று ஆடி அமாவாசை என்பதால் விருதுநகர், மதுரை, சென்னை, திருச்சி, கோவை, நெல்லை, தென்காசி உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களிலும் இருந்து வந்த பக்தர்கள் அதிகாலை முதலே தாணிப்பாறையில் குவிந்தனர். அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல் சென்னை கடற்கரை, கடலூர் சில்வர் பீச், ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை, திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்திமலையில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோயில் உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இன்று மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
The post ஆடி அமாவாசையை முன்னிட்டு நீர்நிலைகளில் குவிந்த மக்கள்: புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் appeared first on Dinakaran.