எந்தப் பாதிப்பையும் அறிவிக்க தயாராக இல்லாத ஒன்றிய பாஜ அரசே தேசிய பேரிடர்தான்: கனிமொழி எம்பி தாக்கு

தூத்துக்குடி: ‘நாட்டில் எந்தவொரு பகுதியில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டாலும் கூட அதை தேசிய பேரிடராக அறிவிக்க ஒன்றிய அரசு தயாராக இல்லை. ஒன்றிய அரசே தேசிய பேரிடராக இருந்துவருகிறது’ என கனிமொழி எம்பி தெரிவித்து உள்ளார். தூத்துக்குடியில் ஆர்.இ.சி. நிறுவனம், இந்திய காப்புக் கை கால் உற்பத்தி கழகம் ஆகியவை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள், உதவி உபகரணங்கள் வழங்கிப் பேசினார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் வெள்ளம் வந்த போது 7 நாட்களுக்கு முன்னரே நாங்கள் தெரிவித்தோம் என்றார்கள். ஆனால், அது உண்மையல்ல என்பதை நமது முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே தெளிவுபடுத்தினார்.

இதே நிலைதான் தற்போதும் கேரளாவில் நடந்துள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பே கேரள மாநிலத்திற்கு நாங்கள் தகவல் தெரிவித்து இருந்தோம் ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை என அவையிலேயே ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். அடுத்த நாளே கேரள முதல்வர் பினராய் விஜயன், இது உண்மைக்கு புறம்பானது என்பதை தெளிவுபடுத்தினார். தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு உதவி செய்வது கிடையாது. தகவல் தந்து விட்டோம் என்று திரும்பத் திரும்ப சொல்வதையை ஒன்றிய அரசு வழக்கமாக கொண்டுள்ளது. நாட்டில் எந்தவொரு பகுதியில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டாலும் கூட அதை தேசிய பேரிடராக அறிவிக்கத் தயாராக இல்லாத ஒன்றிய அரசே தேசிய பேரிடராக இருந்துவருகிறது. மாநிலங்களுக்கு தேவையான நிதியை பல்வேறு அரசியல் காரணங்களுக்காக எவ்வளவு நாள் இழுத்தடிக்க முடியுமோ அவ்வளவு நாள் ஒன்றிய அரசு இழுத்தடித்து வருகிறது. நியாயமாக ஒன்றிய அரசு நமக்கு தர வேண்டிய நிதியை கொடுத்துதான் ஆக வேண்டும்’’ என்றார்.

The post எந்தப் பாதிப்பையும் அறிவிக்க தயாராக இல்லாத ஒன்றிய பாஜ அரசே தேசிய பேரிடர்தான்: கனிமொழி எம்பி தாக்கு appeared first on Dinakaran.

Related Stories: