வயநாடு நிலச்சரிவு.. மைல்கல்லாக அமைந்த பெய்லி பாலப்பணி; மீட்பு பணிகள் குறித்து சில புள்ளி விவரங்கள்..!!

கேரளா: நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள வயநாட்டில் நடைபெற்று வரும் மீட்பு பணிகள் குறித்து சில புள்ளி விவரங்கள் பின்வருமாறு. கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள சூரல்மலை பகுதியில் கடந்த 29ம் தேதி நள்ளிரவு மற்றும் 30ம் தேதி அதிகாலையில் அடுத்தடுத்து நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 350ஐ தாண்டுகிறது. இதுவரை 275க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான மீட்பு பணிகளை முப்படை வீரர்கள், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர், கடற்படை, வனத்துறை, 8 காவல் நிலையங்களை சேர்ந்த போலீசார், உள்ளூர் நீச்சல் வீரர்கள் என மொத்தம் 2,000க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகள் பூஞ்சிரிமட்டம், முண்டக்கை, பள்ளிப்பகுதி, சூரல்மலை டவுன், சூரல்மலை கிராமம், பள்ளத்தாக்கு என 6 மண்டலங்களாக பிரிக்கப்பட்டன. இவற்றில் மீட்புப்பணி வீரர்கள் 40 குழுக்களாக பிரிக்கப்பட்டு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சூரல்மலையும், முண்டக்கை பகுதியினையும் இணைக்கும் வகையில் ராணுவத்தின் சார்பில் அமைக்கப்பட்ட தற்காலிக பெய்லி பாலம்தான் மீட்புப்பணியின் முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது. இதற்கான உபகரணங்கள் டெல்லி மற்றும் பெங்களூருலிருந்து விமானங்கள் மூலம் கண்ணூர் விமான நிலையம் கொண்டுவரப்பட்டு, பின்னர் 17 லாரிகள் மூலமாக வயநாடு கொண்டுவரப்பட்டு தற்காலிக பாலங்கள் அமைக்கும் பணி நடைபெற்றது.

மெட்ராஸ் சாப்பர்ஸ் எனப்படும் ராணுவத்தின் மெட்ராஸ் இன்ஜினியரிங் படைப்பிரிவு இந்த பெய்லி பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டது. மெட்ராஸ் சாப்பர்ஸின் 144 பேர் கொண்ட குழுவை வழிநடத்திய ராணுவ மேஜர் சீதா அசோக் ஷெல்கே, வெறும் 31 மணி நேரத்தில் பாலத்தை அமைத்து அசத்தினார். மகாராஷ்டிராவின் அகமதுநகர் காதில்கான் கிராமத்தைச் சேர்ந்த 35 வயதான சீதா அசோக் ஷெல்கே, தன்னுடைய செயல்படுகளுக்காக வயநாட்டு மக்களால் தற்போது பாராட்டப்பட்டு வருகிறார். தற்காலிக பெய்லி பாலம் அமைக்கப்பட்ட பிறகே மீட்புப்பணி அடுத்த கட்டத்தை நோக்கி வேகமாக நகர்ந்தது எனலாம்.

நிலச்சரிவில் ஏற்பட்ட பகுதிகளில் இருந்து தற்போது வரை 9,328 பேர் மீட்கப்பட்டு 91 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு இருக்கிறார்கள். குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் இழந்து இயற்கையின் கோரத்தால் தனிமரமாக விடப்பட்டவர்களின் எண்ணிக்கை 528ஆக அதிகரித்துள்ளது. மலப்புரம் மாவட்டத்தில் உள்ள சாலியாறு ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 143 உடல்கள் மற்றும் உடல் பாகங்கள் வயநாட்டிற்கு கொண்டுவரப்பட்டு இருக்கின்றன.

கட்டட இடிபாடுகளுக்கு அடியில் இருந்து 107 உடல்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட உடல் பாகங்கள் கண்டெக்கப்பட்டு இருக்கின்றன. அனைத்து உடல் மற்றும் உடல் பாகங்களும் மரபணு சோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் அலுவலகத்தின் செய்தி குறிப்பில் தெரிவித்து இருக்கிறது. படுகாயம் அடைந்த 264 பேரில், 177 பேர் டிஸ்சார்ஸ் செய்யப்பட்டு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார்கள். 85 பேருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

The post வயநாடு நிலச்சரிவு.. மைல்கல்லாக அமைந்த பெய்லி பாலப்பணி; மீட்பு பணிகள் குறித்து சில புள்ளி விவரங்கள்..!! appeared first on Dinakaran.

Related Stories: