கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 344 ஆக உயர்வு

 

கேரளா: கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 344 ஆக உயர்ந்துள்ளது. 250 பேரை காணவில்லை என கேரள அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நிலச்சரிவில் சிக்கி மண்ணில் சிக்கிய 200க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 9,328 பேர் மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 344ஐ தாண்டி விட்டது. 3 கிராமங்கள் அடியோடு அழிந்தன. நவீன ரேடார்கள், லேசர் கருவிகள், டிரோன்கள் உதவியோடு காணாமல் போன 275 பேரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள சூரல்மலை, முண்டக்கை, புஞ்சிரிமட்டம் ஆகிய இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த பயங்கர நிலச்சரிவு 3 கிராமங்களை அடியோடு அழித்து விட்டது. 4வது நாளாக நேற்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்தன. நேற்று காலை வரை நிலச்சரிவில் பலியானவர்களின் எண்ணிக்கை 340ஐ தாண்டி உள்ளது.

இன்னமும் 200க்கும் மேற்பட்டோர் காணாமல் போய் விட்டதாக கூறப்பட்டாலும், அந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது. சூரல்மலையில் 599 வீடுகளும், முண்டக்கையில் 431 வீடுகளும், புஞ்சிரிமட்டத்தில் 35 வீடுகளும் இருந்தன. இந்த பகுதிகளில் தற்போது 60க்கும் குறைவான வீடுகளே மிஞ்சி உள்ளன. நிலச்சரிவு ஏற்படும் என்று பயந்து அருகில் உள்ள பகுதிகளை சேர்ந்த மேலும் பலர் இந்த வீடுகளில் தஞ்சம் புகுந்தனர். பெரும்பாலான வீடுகளில் அந்த வீட்டினர் தவிர மேலும் பலர் இருந்து உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டு உள்ளனர்.

பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் பல மடங்கு இருக்கும் என்று அஞ்சப்படுகிறது. காணாமல் போனவர்கள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை. சூரல்மலை பகுதியில் மீட்புப் பணிகள் அனைத்தும் ஏற்கனவே முடிந்து விட்டன. முண்டக்கைக்கு செல்வதற்கு ராணுவம் இரும்புப் பாலம் அமைத்து விட்டதால் நேற்று காலை முதல் இங்கு மீட்புப் பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன. பல அடி ஆழத்தில் குவிந்து கிடக்கும் சகதியை தோண்டியும், இடிந்து கிடக்கும் வீடுகள், கட்டிடங்களுக்கு உள்ளும் நவீன உபகரணங்களை பயன்படுத்தி தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

இந்தப் பகுதியில் யாரும் உயிரோடு இல்லை என்று ஏற்கனவே ராணுவம் தெரிவித்து உள்ளது. ஆனாலும் யாராவது உயிருடன் இருக்க மாட்டார்களா? என்ற நம்பிக்கையுடன் தேடுதல் வேட்டையில் மீட்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

The post கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 344 ஆக உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: