×

உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு திருமாவளவன் வரவேற்பு

சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை: எஸ்சி பட்டியலில் உள்ள சாதிகளைப் பிரித்து உள் ஒதுக்கீடு வழங்குவதற்கு மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழ்நாடு அரசு அருந்ததியர் சமூகப் பிரிவினருக்கு உள் ஒதுக்கீடு வழங்க இயற்றியுள்ள சட்டமும் செல்லுபடி ஆகும் என்றும் அது தெரிவித்திருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம். ஏழு நீதிபதிகள் கொண்ட இந்த பேரமர்வில் சில நீதிபதிகள் எஸ்சி பிரிவினருக்கும் கிரீமிலேயர் என்னும் வருமான வரம்பை அளவுகோலாகக் கொள்ளும் ஒரு முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இட ஒதுக்கீடே நிறைவு செய்யப்படாத நிலையில் கிரீமிலேயர் முறையைப் புகுத்தி இட ஒதுக்கீட்டுக்குத் தகுதியானவர்களை நீக்க முயற்சிப்பது எந்த விதத்திலும் நீதி ஆகாது. தீர்ப்பில் கிரீமிலேயர் தொடர்பான கருத்துக்கள் ஆணையாகப் பிறப்பிக்கப்படவில்லை. எனவே, அவற்றை நீதிபதிகளின் கருத்துகளாக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, தீர்ப்பின் ஒரு பகுதியாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அதைப் புறக்கணிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசை கேட்டுக் கொள்கிறோம்.

* ரூ.15 லட்சம் நிதியுதவி
கேரளாவில் நிலச்சரிவு பேரிடரால் 200க்கும் மேற்பட்டோர் உயிருடன் புதையும் பெருந்துயர் நடந்துள்ளது. இந்த பேரிடரை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டுமென ஒன்றிய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். அதன்படி பாதிக்கப்பட்ட பகுதியில் எஞ்சியுள்ளோரின் ‘மறுவாழ்வு மற்றும் மறுகட்டுமானம்’ ஆகியவற்றுக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதேபோல் பேரிடரை எதிர்கொள்ளும் கேரள மாநில அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ரூ.15 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என விசிக தலைவர் திருமாவளவன் டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

The post உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு திருமாவளவன் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Thirumavalavan ,Supreme Court ,CHENNAI ,Tamil Nadu Government ,Dinakaran ,
× RELATED ஒரு வழக்கில் ஒருவர் கைதாகிறார்...