×
Saravana Stores

மீனவர்கள் உண்ணாவிரதம் அதிமுக பங்கேற்பு: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் ஜீவாதார பிரச்சனையாக இருந்தாலும், மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளாக இருந்தாலும், அவற்றை தீர்த்து வைப்பதில் ஒன்றிய அரசு பாராமுகமாக இருந்து வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும். அந்தவகையில் ,தூத்துக்குடி மாவட்டம், தருவைக்குளத்தில் இருந்து பருவலை மூலம் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற 22 மீனவர்களையும், அவர்களுடைய விசை படகுகளையும் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி எல்லை தாண்டியதாக குற்றம் சுமத்தி இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.

மேலும், சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்டு தர கோரி ஒன்றிய அரசுக்கும், தமிழக அரசுக்கும், மீனவர்கள் தொடர் கோரிக்கைகள் வைக்கப்பட்டும் உரிய தீர்வு காணப்படவில்லை. இதன் காரணமாக கடந்த 3ம் தேதி இலங்கை நீதிமன்றம் சிறைபிடிக்கப்பட்டுள்ள 12 மீனவர்களுக்கு அபராதம் விதித்ததோடு, அபராத தொகையை செலுத்த தவறினால் 6 மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்துள்ளதோடு, எஞ்சியுள்ள 10 மீனவர்களை விடுவிக்கக் கோருவதற்கான தீர்ப்பு வரும் 10ம் தேதிக்கு வழங்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 22 மீனவர்களையும், 2 விசைப் படகுகளையும் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க ஒன்றிய அரசை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம், தருவைக்குளம் விசைப் படகு மீனவர்கள் ஒன்றிணைந்து நாளை நடத்த இருக்கும் மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தில், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, சண்முகநாதன், செல்லப்பாண்டியன் ஆகியோர் பங்கேற்பார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மீனவர்கள் உண்ணாவிரதம் அதிமுக பங்கேற்பு: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Edappadi Palaniswami ,Chennai ,General Secretary ,Tamil Nadu ,Sri Lankan Navy ,Union Government ,
× RELATED எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக...