ஆக்கிரமிக்கும் யூகலிப்டஸ் மரங்கள்.. எதிர்காலத்தில் உண்ணவே உணவு இருக்காது : ஐகோர்ட் நீதிபதிகள் வேதனை!!

மதுரை: நாளுக்கு நாள் விளைநிலங்கள் குறைந்து வருவதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கவலை தெரிவித்துள்ளது. புதுக்கோட்டையில் யூகலிப்டஸ் மரங்களை நடுவதற்கு தடை விதிக்கக் கோரி விவசாய சங்க நிர்வாகி தனபதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “புதுக்கோட்டை மாவட்டத்தில் வன பரப்பில், யூகலிப்டஸ் மரங்கள் நடப்பட்டு வருகிறது. யூகலிப்டஸ் மரங்களை வளர்ப்பதற்காக, நாற்புறங்களிலும் அகழிகளையும், பெரிய மண் தடுப்புகளையும் அமைத்து வருகின்றனர். இதனால் மழை நீரானது அதனுடைய ஓட்டத்தில் செல்லாமல் தடுக்கப்படுகிறது. இதனால் கிராமங்களில் உள்ள கண்மாய் குளம் நிறையாமல், விவசாயம் தடைப்படுகிறது.ஆகவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் யூகலிப்டஸ் மரங்களை நட இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். மேலும் நீரோட்டத்தை பாதிக்கும் வகையில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை நீக்க உத்தரவிட வேண்டும்,”என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சுரேஷ் குமார், அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள்,”நாளுக்கு நாள் விளைநிலங்கள் குறைந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் நாம் உணவு பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை அதிகரிக்கும். தற்போது துவரம் பருப்பு உள்ளிட்ட தானியங்களை இறக்குமதி செய்கிறோம். நிலத்தையும் மழையையும் மட்டுமே நம்பியிருக்கும் விவசாயிகளை தடுத்தால் எப்படி?. காகித ஆலை வேண்டுமா? உணவு வேண்டுமா?. புன்செய் நிலங்கள் பிளாட்டுகளாக மாற்றப்பட்டுள்ளன; எதிர்காலத்தில் உண்ணவே உணவு இருக்காது. புதுக்கோட்டை மாவட்டத்தில் வன பரப்பில், யூகலிப்டஸ் மரங்கள் -வளர்ப்பதால் ஏரிகளுக்கு மழை நீர் வருவது தடுக்கப்படுகிறதா? என 6 பேர் கொண்ட வல்லுநர் குழு ஆய்வு செய்து 2 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,”இவ்வாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

The post ஆக்கிரமிக்கும் யூகலிப்டஸ் மரங்கள்.. எதிர்காலத்தில் உண்ணவே உணவு இருக்காது : ஐகோர்ட் நீதிபதிகள் வேதனை!! appeared first on Dinakaran.

Related Stories: