கோயம்புத்தூர் மாவட்டம் கருமத்தம்பட்டியில் ரூ.300 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பு..!!

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்டம், கருமத்தம்பட்டியில் ரூ.300 கோடி மதிப்பிலான திருக்கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படியும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவுறுத்தலின்படியும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் கோயம்புத்தூர் மாவட்டம், கருமத்தம்பட்டி, அருள்மிகு கரியமாணிக்கப் பெருமாள் திருக்கோயிலுக்கு சொந்தமான ரூ.300 கோடி மதிப்பிலான நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டு திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம், கருமத்தம்பட்டியில், அமைந்துள்ள அருள்மிகு கரியமாணிக்கப் பெருமாள் திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் மேற்படி கிராமத்தில் சர்வே எண் 283/1-ல் 5.36 ஏக்கர் மற்றும் சர்வே எண் 457/1-ல் 10.94 ஏக்கர் ஆக மொத்தம் 16.30 ஏக்கர் நிலங்கள் 11 தனிநபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் கோவை மண்டல இணை ஆணையர் பெ.ரமேஷ் நீதிமன்ற உத்தரவின்படி, சட்டப்பிரிவு 78-ன் கீழ் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, கோவை உதவி ஆணையர் (கூ.பொ.) இரா.மேனகா தலைமையில் காவல்துறை மற்றும் வருவாய்துறை அலுவலர்கள் முன்னிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, அந்நிலங்கள் முழுவதுமாக அளவீடு செய்யப்பட்டு திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. மீட்கப்பட்ட நிலங்களின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.300 கோடியாகும். முதலமைச்சர் தலைமையிலான இவ்வரசு பொறுப்பேற்ற நாள் முதல் இன்று வரை ரூ.6,446.93 கோடி மதிப்பீட்டிலான 6,746.97 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வின்போது திருக்கோயில் தக்கார் பா.தன்ராஜ், வட்டாட்சியர் (ஆலய நிலங்கள்) குமரி ஆனந்தன், காவல் ஆய்வாளர் சண்முகவேல், வருவாய்த்துறை ஆய்வாளர் ரமேஷ், செயல் அலுவலர் இரா.ராஜகுரு, ஆய்வர்கள் மற்றும் நில அளவையர்கள் உடனிருந்தனர்.

The post கோயம்புத்தூர் மாவட்டம் கருமத்தம்பட்டியில் ரூ.300 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: