வால்பாறையில் மண்சரிவு எதிரொலி; ஆற்றின் கரையோர மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க ஏற்பாடு: மாவட்ட ஆட்சியர், கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு

வால்பாறை: வால்பாறையில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் ஆற்றின் கரையோரம் வசிக்கின்ற மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. மழை,மண்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர், கண்காணிப்பு அலுவலர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் மழைக்காலங்களில் மேற்கொள்ளபட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அரசு செயலாளர் தலைமையில் நடைபெற்றது. வால்பாறை நகராட்சி அலுவலக மன்ற கூடத்தில் மழைக்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அரசு செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் கலெக்டர் கிராந்திகுமார் பாடி,பொள்ளாச்சி சப்.கலெக்டர் கேத்ரின் சரண்யா ,வால்பாறை நகராட்சி தலைவர் அழகு சுந்தரவள்ளி செல்வம், துணைத் தலைவர் செந்தில், நகராட்சி ஆணையர் விநாயகம், நகர செயலாளர் சுதாகர், கவுன்சிலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பருவமழை சமயங்களில் ஏற்படக்கூடிய இயற்கை இடர்பாடுகளை தடுக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மழைக்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டது. வால்பாறையில் தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் ஆறுகளில் வெள்ளம் ஏற்பட்டால், ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைக்க நிவாரண முகாம்கள் ஏற்படுத்த உத்தரவிடப்பட்டது.

அதன்படி, வால்பாறை நகராட்சி, காமராஜ் நகரை சேர்ந்த 15 வீடுகளில் வசிப்பவர்களை, வால்பாறை தூய இருதய மேல்நிலைப் பள்ளியிலும், கக்கன் காலனி, சிலோன் காலனி, வாழைத்தோட்டம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 170 வீடுகளில் வசிப்பவர்களை, அரசு மேல்நிலைப் பள்ளியிலும், நகராட்சி மைதானத்தை ஒட்டி சிறுவர் பூங்கா பகுதியை சேர்ந்த 25 வீடுகளில் வசிப்பவர்களை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியிலும், சோலையார்டேம், பெரியார் நகரை சேர்ந்த 50 வீடுகளில் வசிப்பவர்கள் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் உருளிக்கல் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியிலும், ரொட்டிகடை குவாரி பகுதியை சேர்ந்த 20 வீடுகளில் வசிப்பவர்களை லோயர் பாரளை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும், டோபி காலனி பகுதியை சேர்ந்த 25 வீடுகளில் வசிப்பவர்களை நகராட்சி சமுதாய நலக்கூடத்திலும் தங்க வைக்க நிவாரண மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, வால்பாறை 23 வது கொண்டை ஊசி வளைவில் மண் சரிவு ஏற்பட்டுள்ள பகுதியில் 2000 மணல் மூட்டைகள் கொண்டு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஜெய முரளிதரன் நேரில் பார்வையிட்டார்.

மேலும் சோலையார் அணை இடதுகரை பகுதியில் மண் சரிந்து ராஜேஸ்வரி மற்றும் தனப்பிரியா ஆகிய இருவரும் உயிரிழந்ததையடுத்து, வீட்டிற்கு சென்ற ஆய்வு குழுவினர் குடும்ப உறுப்பினர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.ஆய்வின் போது அப்பகுதி மக்கள் கூட்டாக அப்பகுதியில் செய்யப்படவேண்டிய வளர்ச்சி பணிகள் மற்றும் சாலைப் பணிகள் குறித்து கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் சோலையார் அணை வனத்துறை சோதனைச் சாவடியில் இருந்து பன்னிமேடு செல்லும் பொதுப்பணித்துறையின் சாலையை மாநகராட்சியிடம் ஒப்படைக்க மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அதிகாரிகளை வலியுறுத்தினார். ஆய்வின் போது வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, நகராட்சி, மின் வாரியம் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள், அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post வால்பாறையில் மண்சரிவு எதிரொலி; ஆற்றின் கரையோர மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க ஏற்பாடு: மாவட்ட ஆட்சியர், கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: